Ad Widget

அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! – அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன்

அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது.

தீர்வு காலதாமதமாகப் போகுமாக இருந்தால் கிடைக்க வேண்டிய தீர்வு கை நழுவிப் போகலாம். வடக்கு, கிழக்கு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களை நியமிப்பதில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இருந்தபோதிலும் அந்த அற்ப விடயங்களைப் பேசி அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெறுவதிலும் பார்க்க நமது அரசியல் இலக்கை அடைய முயற்சிப்பதே முக்கியமானதாகும்.

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆரம்பத்தில் எமக்களித்த வாக்குறுதிகளுக்கமைய நடந்து கொள்ளவில்லை என்பது எம்மை சீண்டிப் பார்க்கும் விடயம்தான். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுள் சர்வதேசத்துக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. வடகிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்களாக அரசாங்கம் தம் கட்சி சார்ந்தவர்களை நியமித்திருப்பதாக அறியமுடிகிறது. அது எந்தளவுக்கு உண்மையென்பது எனக்குத் தெரியாது. ஆனால், இன்றைய சூழ்நிலையிலும் காலக்கட்டத்திலும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர் நியமனங்களை மிகவும் முக்கியமான விடயமாக எடுத்துக் கொள்ள நான் தயாராகவில்லை.

அரசாங்கத்திடமிருந்து சில உதவிகளைப் பெறுவதன் மூலம் எமது இலட்சியமாக இருக்க வேண்டிய அரசியல் தீர்வு பலவீனமடைந்து விடக் கூடாதென நான் கருதுகிறேன். ஆனால், இவ்வாறான விடயங்களை அரசாங்கம் கையாளுகின்றபோது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் காணப்படுகின்ற மற்றுமொரு பிரச்சினை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமாகும் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை அரசாங்கம் எமக்கு ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நடந்து கொள்ளவி்ல்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னைய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்புக்களை காட்டி பல விபரீதமான வினாக்களை புதிய அரசாங்கத்திடம் வினவி, பலவிதமான அச்சங்களையும் சந்தேகங்களையும் ஊட்டி கைதிகளின் விடுதலையை தடுப்பற்கு கடுமையாக முயற்சிக்கின்றார்கள்.

கைதிகள் விடுதலையானது காலதாமதமாவதற்கு இதுவுமொரு காரணமாகும். இதைவிட அரச அலுவலகங்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்காமையும் மறைமுகமான காரணங்களாக இருக்கலாம். ஆனால், இவையெல்லாவற்றையும் தாண்டி நீண்ட காலமாக சிறையிலுள்ள கைதிகளை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதை நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கி்ன்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசியும் இருக்கிறார்கள். நாம் எமது முயற்சிகளை எக்காரணம் கொண்டும் கைவிடப் போவதில்லை. வழமைக்கு மாறாக, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போது த.தே.கூ. ஆதரவாக வாக்களித்தது உண்மை. வாக்களித்தமைக்கான காரணமென்னவென்றால் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அரசியல் தீர்வை விரைவில் பெற வேண்டுமாயின் அரசாங்கத்துக்கும் எமக்கிடையில் ஒரு நல்லுறவைப் பேணவேண்டுமென்பதற்காகவேயாகும். அது அவசியமும் கூட.

அவ்விதமான ஒரு தொடர்பு இல்லாமல் எம்மக்கள் எதிர்பார்க்கின்ற அபிலாஷை கொண்டுள்ள அந்த தீர்வை அடைய முடியாமல் போய்விடும். இன்றைய அரசாங்கமானது முன்னைய அரசாங்கத்திலும் பார்க்க, பல விடயங்களில் தமிழ் மக்களுக்கு சார்பாக நடந்திருக்கிறது. பல்வேறு எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வருகின்ற போதும் அதைப் பொருட்படுத்தாது சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதன் காரணமாகவே வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் எமது பயணத்தை தொடர்வதற்காக ஆதரவளிக்க வேண்டிய அவசியமொன்று எமக்கேற்பட்டிருக்கிறது. நாங்கள் எப்போழுதும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அரசியலில் இணையுங்கள் என எமக்கு பல்வேறு அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தன. ஆனால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் எதிர்கட்சியி்ல் தான் இருந்துகொண்டிருக்கின்றோம்.

எமது மக்களும் இந்த நாட்டில் சம அந்தஸ்த்து கொண்ட பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படாதவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையமுடியாது. இவ்விடயம் அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் எமது நல்லெண்ணத்தையும் உறுதியையும் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் நிரூபிக்கும் முகமாக வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தோம். தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் தீர்வானது 2016 ஆம் ஆண்டு முடிவதற்கு முன் கொண்டுவரப்பட வேண்டுமென்பது அவசியமானது என நான் கருதுகின்றேன்.

தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக பயனற்ற தீர்வை பெற நாம் தயாராகவுமில்லை. அவ்வாறானதொரு தீர்வை அரசு தர நினைக்குமாக இருந்தால் அதையும் நாம் ஏற்கத் தயாராகவில்லை. எமது சமூக, அரசியல், பொருளாதார, கலாசார அபிலாஷைகளை நாமே நிறைவேற்றக் கூடியவகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் சில கருமங்களை ஆரம்பித்துள்ளது அதற்கு உதாரணமாக அரசாங்கத்தின் பேச்சாளர்களும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி பேசுகிறார்கள். இவ்விடயத்தை நாம் பக்குவமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய அவசியமிருக்கிறது. மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குழம்பக்கூடிய விதத்தில் யாரும் செயற்படக்கூடாது. தேவையற்ற பிரசாரங்களில் ஈடுபடாமல் அடக்கமாகக் கையாள வேண்டும். எமது குறிக்கோளை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் கடுமையாக உழைப்போம். அந்த வாய்ப்பை நிறைவு செய்வதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இன்று ஐ.நா.வினால் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் நிரந்தரமான நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமாக இருந்தால் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். கொண்டுவரப்படுகின்ற அரசியல் தீர்வினால் நாட்டில் இருந்து வரும் நிலைமைகள் மாறவேண்டும் முன்னைய நிலைமைகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறக்கூடாது என தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக நாம் எல்லோரும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என சம்பந்தன் தெரிவித்தார்.

Related Posts