Ad Widget

அரியாலை படுகொலைச் சம்பவம்: CID விசாரணையில் உண்மைகள் அம்பலம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் டொன் பொஸ்கோ என்ற இளைஞன் படுகொலைச் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கு விசேட அதிரடிப்படையினர் இருந்தமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது தொலைபேசிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த இரு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இக் கொலையை தாம் செய்யவில்லையென கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட அதிகாரிகள் தொடர்ந்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது-24) என்ற இளைஞன் உயிரிழந்தார். கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன கடந்த வாரம், யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலுள்ள விசேட அதிரடிப்படையின் முகாமிலிருந்து கைப்பற்றப்பட்டன. அத்தோடு, கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டது.

இக் கொலை தொடர்பான விசாரணை குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விசேட விசாரணை அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts