Ad Widget

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு 4ஆவது நாளாகவும் தொடர்கிறது

நாடளாவிய ரீதியில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது கோரிக்கைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சர் வழங்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சட்டப்பூர்வ மருத்துவ இடமாறுதல் வாரியத்தின் அனுமதியின்றி சிறப்பு மருத்துவர்களின் நியமனப் பட்டியலைத் தொகுத்தல், 2022ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் பட்டியலை வெளியிடாமை, வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் பணிப்புறக்கணிப்பின்போது அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலை, மஹரகம போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் உதவிச் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த ஆங்கில ஊடகமொன்றுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts