Ad Widget

அரச தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு – தென்னக்கோன்

அரசாங்கத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நஷ்டஈடு வழங்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

mavadda-nelavalavai-thenaikkalam

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட யாழ். நில அளவைத் திணைக்கள கட்டிடத்தை நேற்றயதினம் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வடபகுதி மண்ணிற்காகவே 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்றது. இந்த நிலையில், வட – கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தமது பொறுப்பாகுமெனவும் அவர் கூறினார்.

கடந்த காலத்தில் தரைப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 18,582 ஏக்கர் காணியும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 808 ஏக்கர் காணியும் விமான படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 717 ஏக்கர் காணியும் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2013ஆம் ஆண்டு கிளிநொச்சியில் காணி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது, 10,000 காணி உறுதிப்பத்திரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வருடமும் மேலும் 25,000 காணி உறுதிப்பத்திரங்கள் மக்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் சேவையாற்றுவோம் எனவும் அவர் கூறினார்.

எந்த நேரத்திலும் இனவாதிகளாகவோ சமய குரோதிகளாகவோ தாம் இருக்கவில்லை. வட, கிழக்கு மக்களை தமது சகோதரர்களாக இணைத்து ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் சேவை செய்வோமெனவும் அவர் கூறினார்.

இந்த மக்களுக்கு சேவையாற்ற கிடைத்தமை தனக்கு அரிய சந்தர்ப்பமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts