அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படாத வயதெல்லை கிழக்கில் மாத்திரம் ஏன் பிற்றப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கல்வியமைச்சருக்கு பதிலாக அவரது பதிலை சபைக்கு தெரிவித்த காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பட்டதாரிகளை மாகாண சபைகள் ஆட்சேர்ப்பு செய்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென தெரிவித்தார்.
இதன் பின்னர் உரையாற்றிய போதே அப்துல்லா மஹ்ரூப் மேற்குறித்த வினாவை எழுப்பியுள்ளார்.
அத்தோடுஇ பட்டதாரிகளிடம் கிழக்கு முதல்வர் விண்ணப்பங்களை கோருகின்ற போதிலும், 35 – 45 வயதிற்கு உட்பட்டவர்களில் விண்ணப்பங்களை பொதுச்சேவை ஆணைக்குழு நிராகரிப்பதாக குறிப்பிட்டார். ஏனைய மாகாணங்களில் இவ்விடயம் கருத்திற்கொள்ளப்படாத நிலையில், கிழக்கு பட்டதாரிகளிடம் மாத்திரம் இந்த நடைமுறையை திணிப்பதானது, கிழக்கு பட்டதாரிகளின் தனியுரிமையை மீறும் செயலென அப்துல்லா இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் ஓய்வுபெறும் வயது தற்போது 55 இலிருந்து 60 வரை அதிகரித்துள்ள நிலையில் நியமனக் காலத்தை அதிகரிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் கல்வியமைச்சின் ஊடாக ஜனாதிபதியும் பிரதமரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்துல்லா மஹ்ரூப் கேட்டுக்கொண்டார்.