Ad Widget

அரசு கொடுக்கும் உருக்கு வீடுகள் பொருத்தமானவையா? கொழும்பில் இன்று கலந்தாய்வு

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் முன்னரே தயாரிக்கப்பட்ட உருக்கு, பிளாஸ்டிக் பாகங்களைப் பொருத்தி உருவாக்கப்படுவனவாகும். இவ்வீடுகள் அம்மக்களது பயன்பாட்டுக்கு அந்நியமானவை என்றும் வாழ்க்கைமுறை காலநிலை, சூழல் போன்றவற்றுக்குப் பாதகமானவை எனவும் விமர்சிக்கப்படுகின்றன.

முன்பெல்லாம் உரிமையாளரால் கட்டப்படுவதாகவே வீட்டுத்திட்டங்கள் அமைந்தன. இப்புதிய திட்டம் முற்றுமுழுதாக ஒப்பந்தக்காரரால் கட்டப்படுவதாகும். அத்துடன் நிர்மாணப் பணிகளுக்கு பன்மடங்கு பணம் ஒதுக்கப்பட்டு ஊழல், மோசடிகள் மூலம் ஒப்பந்தக்காரர்களும், தொடர்புடைய அமைச்சர்களும் வயிறு வளர்ப்பதற்கு ஏதுவான முறையில் இந்தத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதியாகும் பொருட்களைக்கொண்டு வெளிநாட்டு ஒப்பந்தக் காரரால் கட்டப்படவுள்ள இவ்வீட்டுத்திட்டத்தின் பின்னணிகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கி நண்பரான கோடீஸ்வர வர்த்தகர் லக்ஷ்மி மிட்டல் இதற்கான நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இப்புதிய திட்டத்தால் வீடுகளை வேகமாகக் கட்டிமுடிக்க முடியும் எனவும், வீட்டுத்திட்டங்களால் ஏற்படும் ஊழல், கடன் சிக்கல்களைக் குறைத்து மக்களுக்கு நன்மை செய்ய முடியும் எனவும் அரச தரப்பு போலியான வாதங்களை முன்வைத்து, பொதுமக்களின் பெயரில் பாரிய தொகையொன்றை சுருட்டிக் கொள்வதற்கு ஒருசிலருக்கு வழியமைத்துக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வடக்கு மக்களின் வாழ்வியலுக்கு அந்நியமான உருக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் கலந்துரையாடும் நிகழ்வொன்றை சமூக விஞ்ஞான கற்கை வட்டம் சார்பில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, வெள்ளவத்தை 121, ஹம்ப்டன் லேன் இல் இன்று மாலை 6:30 க்கு குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

Related Posts