Ad Widget

அரசியல் பலம் எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் நலன்புரி முகாமில் வாழும் மக்களின் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டுவரப்படும் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களின் நலன்புரி முகாம் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மல்லாகம் நீதவான் முகாமிற்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் அவர்கள் முகாம் மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

DSCF2048

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக நீங்கள் உங்கள் சொந்த இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி முகாம் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்கள். முகாம் வாழ்க்கை பற்றி நான் நன்கறிவேன். இருப்பிடம், சுகாதாரம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளப்படும் இடர்பாடுகளையும் அறிந்து வைத்துள்ளேன்.

எனவேதான், நலன்புரி முகாம்களில் வாழும் மக்களாகிய உங்களின் நலன்கருதி வரும் மழை காலத்திற்கு முன்பதாக தற்போது குடியிருக்கும் குடியிருப்புகளின் கூரைகளைத் திருத்தம் செய்வது, மலசலகூடங்களைப் புனரமைப்புச் செய்வது, சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் அல்லது மாற்று ஏற்பாடு ஒன்று செய்யும் வரையில் நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதாரத்திற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நீங்கள் வாக்களித்து, வெற்றி பெறச் செய்ததைப் போன்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமக்கு வாக்களித்திருந்தால், நாம் மக்களின் தேவைப்பாடுகள் பலவற்றுக்குத் தீர்வு கண்டிருப்போம். எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிகளவில் எமக்கு வாக்களித்து, அரசியல் பலத்தைத் தருவீர்களாக இருந்தால், உங்களை மீளக்குடியேற்றுவோம். அந்த வகையில்தான், மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற நிலைப்பாட்டிலும் நாம் தெளிவான உறுதிப்பாட்டுடன் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஐங்கரனும் உடனிருந்தார்.

Related Posts