Ad Widget

அரசியல் கைதிகள் விவகாரம்: மகசீன் சிறைச்சாலை கைதிகளும் உண்ணாவிரதம்

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வடக்கு கிழக்கில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நேற்றைய தினம் யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தமது போராட்டத்தின் நியாயத்தை சர்வதேசம் புரிந்துகொள்ளும் வகையில் இன்றைய தினம் இப் போராட்டத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக புதிய மகசீன் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளில் பலர் 8 முதல் 24 வருடங்கள் வரை எவ்வித தீர்வும் இன்றி காணப்படுகின்றனர். இலங்கையிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் 130 பேர் அரசியல் கைதிகளாக உள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றனர். இவர்களுடன் பல கொடிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், போராட்டத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற காரணத்தைக் காட்டி சிறைவைக்கப்பட்டிருக்கும் தம்மை, இனியும் இவ்வாறு இருளில் நீடிக்க விடாமல், நல்லிணக்க அடிப்படையில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் ஏதேனும் ஒரு பொறிமுறையின் ஊடாக விடுதலை செய்ய வேண்டுமென அரசியல் கைதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts