Ad Widget

அரசியல் கைதிகள் குறித்த விபரங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்கிறார் ஜனாதபதி!

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பான விபரப்பட்டியல் ஏதும் தம் வசம் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி இல்லத்தில் நேற்று ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச தரப்பினர் தம் வசமுள்ள பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அரசிடம் தடுப்பிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான விபரப்பட்டியல் ஏதேனும் உள்ளதா என வினவியதற்குப் பதிலளித்த ஜனாதிபதி தம் வசம் எந்தவொரு பட்டியலும் இல்லை என்று பதிலளித்தார்.

இதேவேளை, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற சதிப்புரட்சி தொடர்பான விசாரணையின் நிலை என்ன என எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான ஜனவரி 8ஆம் திகதி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்து தேர்தல் முடிவுகள் வெளியாவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதென எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” – என்று கூறினார்.

அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும் தன்னைக் கொலைசெய்ய முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் குறித்து இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் அடுத்து பொதுத் தேர்தல் இடம்பெறும் என்றும் அது புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடைபெறும் என்று இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை, பொலிஸ் நிதி மோசடி பிரிவை இரத்து செய்வதற்கு தான் உறுதி அளிக்கவில்லை என்றும், ஆனால் அதில் உள்ள சில சரத்துக்கள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி பிரிவு அரசியல் கட்சி ஒன்றின் செயற்திட்டத்திற்கு இயங்குகிறது என எவரும் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் அது குறித்து ஆராயப்படும் என்றும், ஆனால் தற்போதைய நிலைவரத்தின்படி அதில் அரசியல் செயற்பாடு இல்லை என்பது புலப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

Related Posts