நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும்வரை யிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
கொழும்பு, மெகஸின், சீ.ஆர்.பி அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்குமேலாக தடுத்து வைக்கப்பட் டுள்ள சுமார் 250இற்கு அதிகமான அரசியல் கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
“எமது விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை கொண்டோம். தற்போது வரையில் எவையுமே கருத்திற்கொள்ளப்படவில்லை. புதிய ஆட்சியாளர்களுக்கும் எமது விடுதலை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தபோதும் தொடர்ந்தும் பாராமுகத்துடனேயே இருக்கின்றார்கள். ஆகவே இறுதி முயற்சியாக உயிர்நீக்கும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்தோம். அப்போராட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளோம்” என நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டில் அசாதாரண சூழல் காணப்பட்டிருந்த போது பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாம் கடந்த காலத்தில் தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அத்துடன் எமது உறவுகள் நாடாளவிய ரீதியில் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களையும் மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்று வரையில் எமது விடுதலை தொடர்பாக எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சிறைக்கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெற்று தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு நல்லாட்சி நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. அவ்வாறிருக்கையில் எமக்கான பொது மன்னிப்பு விரைவாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டபோதும் இன்றுவரையில் அவ்வாக்குறுதிகள் தொடர்பில் புதிய அரசாங்கத்தரப்பினரும் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். அதே போன்று தமிழ்த் தரப்பினரும் வலியுறுத்தும் அறிக்கைகளை முன்வைக்கின்றபோதும் அவை செயல்வடிவம் பெறாமலேயே தொடர்ந்தும் இருக்கின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் சிறைகளில் முடங்கி தினம் தினம் வருந்துவதை விடவும் வாழ்வா சாவா என இறுதி முயற்சியாக உயிர்நீக்கும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம். கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக குரல் கொடுத்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், எமது உறவுகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் எமது நியாயமான கோரிக்கையை கருத்திற்கொண்டு எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கோரிநிற்கின்றோமெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ளன மற்றும் நல்லாட்சி நடந்துகொண்டிருக்கும் காலம் எனக் கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமானது செய்ய வேண்டிய நல்லிணக்க வேலைகளில் ஒன்றான அரசியல் கைதிகள் விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றது. எனவே கைதிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு, அரசாங்கத்தினாலேயே தள்ளப்பட்டுள்ளார்கள் என கைதிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் ஆகியோர் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு தரப்பினரிடம் எமது உறவுகளை விடுதலை செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோகணேசன், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உறவுகளான நாம், மனித உரிமை அமைப்புக்கள் , குருமார்கள் ஆகியோரினால் நேரடியாக சந்தித்து வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது.
அத்தோடு மன்னார் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை மைத்திரிபால சிறிசேன ஐனாதிபதியாக வந்தவுடன் நேரில் சந்தித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டபோது 6 மாத காலத்திற்குள் அனைவரையும் விடுதலை செய்வதாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். ஆனால் மதகுருவிற்கு கொடுத்த வாக்கு கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோன்று சிறையில் வாழும் அரசியல் கைதிகள் தங்களின் கையைழுத்திட்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கூடாக ஐனாதிபதியிடம் விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தனர். அதேபோன்று சிறுவர் தினத்தன்று அரசியல் கைதிகளின் பிள்ளைகள் ஊர்வலமாகச் சென்று வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடாக ஐனாதிபதிக்கு தங்களின் தந்தையர்களை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். புதிய ஆட்சி அமைந்த பின்னர் இவ்வாறான பல முயற்சிகள் செய்தும் பலன் அளிப்பதாகவில்லை.
யுத்தம் முடிவடைந்த அந்த காலப்பகுதியில் 14,000 போராளிகளின் விடுதலைக்கு வழிவகுத்து கொடுத்தது போன்று நல்லெண்ண நோக்கமாக தற்போது சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே பல தரப்பினரது கருத்தாகும். அதேபோன்றுதான் அமெரிக்காவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கூறியிருந்தது.
ஆனால் அவ்வாறான கருத்துக்களுக்கு கூட மதிப்பளிக்காமல் நல்லாட்சி நடப்பதாக தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஆட்சியாளர்களாகவே இருக்கின்றார்கள். அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையே ஏமாற்றும் ஒரு வாடிக்கையையே கொண்டுள்ளார்கள். இதனாலேயே தற்போது அரசியல் கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆகவே தொடர்ந்தும் பாராமுகத்துடன் செல்லாது அவர்களுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வது குறித்து அனைத்து தரப்பினரும் கவனத்திலெடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கண்ணீருடன் கோரியுள்ளனர்.
அதேநேரம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் கடந்த மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மொனராகலை, போகம்பரை, அநுராதபுரம், நீர்கொழும்பு, அநுராதபுரம், நீர்கொழும்பு, பொலநறுவை, மட்டக்களப்பு, மகெசின், பதுளை, வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் 178 ஆண் அரசியல் கைதிகள் இருப்பதாகவும், வெலிக்கடையில் ஒரு பெண் அரசில் கைதிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தற்போது அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளமையை கவனத்திலெடுத்து அவர்களின் விடுதலை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். அவர்களுக்கு விரைந்து பொதுமன்னிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.
மேலும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைக்கூடங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இறுதியாக 2014ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் அறிவிக்கப்பட்ட தினத்தன்று மெகசீனிலுள்ள அரசியல் கைதிகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டதாகவும் கைதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் புதிய ஆட்சி அமைந்ததன் பின்னர் தமது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் முதற்தடவையாக உண்ணாவிரதப்போராட்டத்தினை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.