Ad Widget

அரசியல் கைதிகளை விடுவித்தால் சிறையிலுள்ள படையினருக்கும் மன்னிப்பளிக்கவேண்டும் – ஜனாதிபதி

“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரும் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே நியாயமானது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமர் நியமனத்தின் பின்னர் ரணில் விக்ரமசங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை இன்று நடத்திய சந்திப்பில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அவரது உரையின் மற்றொரு பகுதி வருமாறு:

“கடந்த நான்கு ஆண்டுகளில் பிக்குகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. முப்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். இவற்றை செய்ய வேண்டாம் எனக் கூறினேன். இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சர்வதேசம் கூறுகிறது. ஆனால் எமது இராணுவத்தினரைக் கொன்ற பிரபாகரனின் தரப்பினருக்கு தண்டனை இல்லை.

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். சர்வதேசம் எனக் கூறும் தரப்பினர் எம்மீது மட்டுமே குற்றங்களைச் சுமத்துகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டன. சர்வதேச போர் சட்டதிட்டங்கள் மீறப்பட்டன என்று இராணுவத்தினருக்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்தக் கோருகின்றனர்.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகளின் முக்கியமானவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து, தண்டனை வழங்கும் பொறிமுறையொன்று இல்லை. இதுகுறித்து யாரும் பேசுவதில்லை.

இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களாயின், பதுங்கியுள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அப்படியெனில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரும் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே நியாயமானது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Related Posts