Ad Widget

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

உண்மையில் நல்லிணக்கம் என்றால் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 12 பேரையும் விடுதலை செய்யுங்கள் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினது வடக்கு நோக்கிய விஜயத்தை முன்னிட்டு கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது.

அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த மகஜர், சனிக்கிழமை (06) யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது.

அதன்போது ஜனாதிபதியிடத்தில், “சமூகங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் மலர வேண்டுமானால், சிறையில் வாடும் எமது 12 தமிழ் அரசியல் கைதிகளையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுதலைசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்த, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், அதற்கான கையெழுத்து மகஜரையும் ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளார்.

Related Posts