Ad Widget

அரசியல் கைதிகளுக்கு என்ன பதில் சொல்வேன் – முதலமைச்சர் சி.வி

பல அரசியல் காரணங்களுக்காக, அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில், அரசியல் கைதிகளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பினார்.

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன் வால்கர் நிடெர்கூர்ன் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (13) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையிலேயே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

‘அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர்களை கோரமுடியாதா? என அவர்கள் என்னிடம் கோரினர். என்ன அடிப்படையில் அவர்களை நான் கோருவது. முடிவு ஒன்று இல்லாமல் அவர்களை நான் எவ்வாறு கோருவது. உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 23 பேரின் நிலை மோசமடைந்துள்ளது. அதில் 9 பேர் நீர் கூட அருந்தாமல் இறக்கும் நிலையில் உள்ளனர் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறினேன்’ என்று அவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (12) ஜனாதிபதியைச் சந்தித்த போது, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தான் தயாரகவிருப்பதாகவும் ஆனால் அரசியல் காரணங்களினால் அதனைச் செய்ய இயலவில்லையென அவர் கூறியிருந்தமை தொடர்பிலும், சுவிஸ் தூதுவருக்கு எடுத்துக்கூறினேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘மக்கள் தங்கள் எதிர்ப்பை அஹிம்சை வழியில் எடுத்துக் காட்டவே இப்படிச் செய்கின்றார்கள். அவர்களுக்கு இதில் நன்மை கிடைக்காவிட்டால், அது அவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டவர்களாக இருக்கும் எனக்கூறினேன்.

அரசியல் ரீதியாக உதவிகள் செய்ய தாயராகவிருப்பதாகவும் கூறினார்கள். புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு உதவிகள் செய்வதாகவும் அவர்கள் கூறினர். மேலும் அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களுடன் பேசியுள்ளதாகவும், உதவிகள் தருவதற்கு தயாராகவிருப்பதாகவும் அவர் கூறினர்.

Related Posts