Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்: சட்டமா அதிபர் திணைக்களமே காரணம்!

அரசியல் கைதிகள் விடுதலை, சட்டமா அதிபர் திணைக்களத்தினாலேயே தாமதப்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“39 அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனையோரின் விடுதலை பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினாலேயே தாமதம் ஏற்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்தத் தாமதம் ஏன் ஏற்படுகின்றது என்பதையும், துரிதப்படுத்த முடியாமைக்கான காரணத்தையும் சட்டமா அதிபர் திணைக்களம் எமக்குக் கூறவேண்டும். ஏனெனில், எம்.பிக்கள் என்னிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு நான் பதிலளிக்கவேண்டும்” – என்றார்.

Related Posts