Ad Widget

அரசியல் இலாபத்திற்காக எங்களை பயன்படுத்தாதீர்கள் – வேலையற்ற பட்டதாரிகள்

அரசியல் தலையீடு காரணமாகவும் ,சுயஇலாப நோக்கத்திற்காகவும் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள் என வடமாகாண வேலையற்ற பட்டாதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான முறையில் இடம்பெற்றது.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்ப்பது தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதன்படி வடமாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளர் செல்வநாயகத்திடம் கையளிக்கப்பட்டு அதனூடாக ஆளுநருக்கும்,அரச அதிபர் ஊடாக பிரதம மந்திரிக்கும், மற்றும் முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கும் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் தலையீடு காரணமாக பட்டதாரிகளை பகடைக்காய்களாக தமது சுயஇலாப நோக்கத்தில்
பயன்படுத்தியுள்ளனர். பல்கலையிலிருந்து வெளியேறிய பட்டதாரிகளாகிய நாம் 2012ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை எந்தவொரு வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமைகளிலேயே இருந்து வருகின்றோம்.

சரியான வினைத்திறனான தகைமைகளைக் கொண்டிருந்தும் எந்தவொரு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களுக்கு
அரசியல் தலையீடுகளினால் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த காலங்களில் சில அரசியல் தலைவர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் தகுதியற்றவர்கள் வேலை வாய்ப்புக்களில் உள்ளீர்க்கப்பட்டு உள்ளார்கள் .தேர்தல் காலங்களில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாக கூறி பலதடவைகள் அலைக்கழிக்கப்பட்டு பலரும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

புதிய அரசின் நல்லாட்சிக்கான பிரகடனப்படுத்தி புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் போது வடமாகாணத்தைச் சேர்ந்த நாட்டின் பலபாகங்களிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் பல சிரமங்களைத் தாண்டி கல்வியினைக் கற்று தற்போதும் வேலைகள் எதுவுமின்றியுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளையும் இணைத்து புதிய அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புக்களையும் பாகுபாடின்றி வழங்க வேண்டும் எனவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts