அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் செயற்பாட்டின் யாழ் மாவட்டத்திற்கான அமர்வு இன்று (15) யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் கேட்டறிய 20 உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக இடம்பெற்று வரும் இக்குழுவின் கருத்தறியும் அமர்வு இன்று (15) யாழ்ப்பாணத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
லால் விஜேநாயக்க தலைமையில் நடைபெற்று வரும் இந்த அமர்வில் எஸ். தவராசா, எஸ். விஜேசந்திரன், என். செல்வகுமாரன், குமுது குசும் குமார, ஹரினி அமரசூரிய, உபிள் அபேரத்ன, சுனில் ஜெயரட்ன உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து மூலச் சமர்ப்பணங்களை பெற்றுக் கொள்கின்றனர்.
இன்றைய அமர்வில் பல கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யாழ் மாவட்டத்திற்கான இரண்டாம் நாள் அமர்வு நாளைய தினமும் (16) காலை 9.30 மணி முதல் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
