Ad Widget

அரசின் 100 நாள் திட்டத்திற்கு கமலேஷ் ஷர்மா பாராட்டு

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் ஷர்மா தற்போதைய அரசின் 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

kamalesh -my3

நேற்று (02) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடும் போது அவர் பொதுநலவாய அமைப்பின் ஆலோசனைகள் பல 100 நாள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அதனூடாக இலங்கையில் புதிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் – ஆணைக்குழு அமைத்தல்- ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல்- தகவல் அறியும் சுதந்திரம் உட்பட பொதுநலவாய அமைப்பினால் முன்மொழியப்பட்ட பல ஆலோசனைகளை தற்போதை அரசு 100 நாள் திட்டத்தில உள்ளடக்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் – ஜனாநாயக முறையில் நடத்தப்பட்டு புதிய அரசை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது. அத்தேர்தலின் கண்காணிப்பு செயற்பாடுகளில் பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி வழங்கிய ஒத்துழைப்பு நினைவுகூறத்தக்கது என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன- பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் ஆரம்ப அங்கத்தவர் என்ற முறையில் தொடர்ந்தும் தமது உறவை வலுப்படுத்த கிடைத்ததையிட்டு தாம் மகிழ்வதாக தெரிவித்தார்.

மேலும் பொதுச் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் இந்நாட்டுக்கு விஜயம் செய்து வழங்கும் ஆலோசனைகளினூடாக அவ்வுறவு மேலும் பலப்படும்.
எமது நாட்டுக்கு சர்வதேச உறவு மிகவும் அவசியம். பொதுநலவாய அமைப்பின் ஒத்துழைப்புடன் அவ்வுறவை மேலும் வலுப்படுத்த முடியும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் மட்டுமல்ல தொடர்ந்தும் நாட்டில் அமைதியை முன்னெடுத்து செல்வது மிகவும் அவசியம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. மக்கள் மத்தியில் நம்பிக்கையை மேம்படுத்தி நம்பிக்கையின்மையை நீக்க பொதுநலவாய அமைப்பின் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு மோல்ட்டாவில் நடைபெறவுள்ளதுடன் கொழும்பு மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசின் ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts