Ad Widget

அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட ஸ்ரீல.மு.கா அதியுயர் பீடம் மீண்டும் அங்கீகாரம்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இரண்டாவது தடவையாக இன்று வழங்கியுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஆரம்பமானது. இதன்போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அதியுயர் பீட கூட்டத்திலும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், கட்சியின் சில முக்கியஸ்தர்கள் குறித்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று நண்பகல் இடம்பெற்றது.

வேட்பாளர் தேர்வு நடவடிக்கையில் கலந்துகொள்ளாமலிருந்த கட்சியின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலியும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பொதுச் செயலாளர் ஹசன் அலி கட்சியின் அதியுயர் பீட கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தபோது கட்சி முக்கியஸ்தர்களினால் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போதே, எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது என இரண்டாவது தடவையாகவும் தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு இடையில் தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று திங்கட்கிழமை மாலை கைச்சாத்திடப்படும் என எதிபார்க்கப்படுகின்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கைச்சாத்திடவுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அம்பாறையில் ஆறு இடங்களும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று இடங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்த்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த அதியுயர் பீட கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்றைய கூட்டத்திலும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts