Ad Widget

அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிட்டால், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரது செயலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்-

”போருக்குப் பின்னர் தமிழர் தாயக பகுதிகளில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணம் செய்வதற்கு அரசாங்கத்தின் பாரிய நிதி எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 2003ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேசம் முன்வந்திருந்தது. அதன் பின்னர் 1 லட்சம் கோடி ரூபாய் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அழிவுகளை ஈடுசெய்வதற்கு எந்த நிதிகளும் கிடைக்காத சூழ்நிலையில்தான் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் நிதியத்தினை ஸ்தாபிக்க வேண்டுமென்று முயற்சிக்கப்பட்டது. எனினும் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இத் திட்டம் தோற்கடிக்கப்பட்டும், தடுக்கப்பட்டும், தாமதிக்கப்பட்டும் வருகின்றது.

கடந்த மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என முதலமைச்சரிடம் கேட்ட போது, அந்த மாதத்திற்குள் பதில் கிடைக்குமென தெரிவித்திருந்தார். ஆனால், இன்று வரை பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், முதலமைச்சரின் நிதியத்திற்கான நிதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எதிர்வரும் வடக்கு மாகாண சபை அமர்வுகளில் முதலமைச்சர் தெரிவிக்காதவிடத்து, முதலமைச்சர் நிதியத்தினை நிறுவ வேண்டும். இல்லாவிடின், ஜனாதிபதி செயலகம் உட்பட பிரதமர் செயலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தினை மேற்கொள்வோம்” என தெரிவித்தார்.

Related Posts