Ad Widget

அரசாங்கத்தின் சௌபாக்கியா வேலைத்திட்ட முன்னேற்பாடுகள் – யாழ் மாவட்டம்

நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் பத்து இலட்சம் வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் ‘சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்ட விதைப்பொதிகள் வழங்குதல்’ நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்றது.

யாழ்.மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினால் 14500 நாற்று விதைப் பைக்கட்களும் மாகாண விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினால் 10000 நாற்று விதைப் பக்கெட்களும் தலா 20 ரூபா வீதம் வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் யாழ். மாவட்ட விவசாய பிரிவினரால் 750 நாற்றுக்களும் கமநல சேவை திணைக்களத்தினால் 3400 நாற்றுக்களும் (கத்தரி, கறிமிளகாய், மிளகாய் பிரதேச ரீதியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சௌபாக்கியா உணவு உற்பத்தி திட்டம்.

அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி செய்யும் நோக்கில் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் விவசாய பயனாளிகளுக்கு மார்ச் 15 – செப்ரெம்பர் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயிர்ச்செய்கை செய்யப்படும் 16 உப உணவுப் பயிர்களிற்கான விதைமானியங்கள் வழங்கப்படவுள்ளது. இவ் விதை மானியங்களிற்கான விண்ணப்பங்களை பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளரிடம் மே மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் விவசாய பயனாளிகள் சமர்ப்பித்தல் வேண்டும்.

உப உணவு பயிர்ச்செய்கையில் சோளம், பயறு,உழுந்து, கொள்ளு, சோயா, கௌப்பி, எள்ளு, நிலக்கடலை, குரக்கன், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், மிளகு, உருளைக்கிழங்கு, மஞ்சள், இஞ்சி, வெள்ளைப்பூடு ஆகிய விதைகள் மானியங்களாக வழங்கப்படவுள்ளது. சிறுபோக உப உணவுத்திட்டத்தில் 1/4 – 1/2 ஏக்கர்களில் பயிரிடும் விவசாய பயனாளிகளுக்கு முழு விதை மானியங்களும் 1/2 – 5 ஏக்கர்களில் பயிரிடும் விவசாய பயனாளிகளுக்கு 50 வீத மானியங்களும் வழங்கவுள்ளதாக மாவட்ட விவசாய அலகுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தோடு இத் திட்டத்தில் விவசாயிகளால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள பயிர்களின் அடர்த்தி, வளர்ச்சி ஆகியவற்றை விவசாய போதனாசிரியர்கள் பார்வையிட்டு குறித்த மானியங்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும் யாழ். மாவட்டத்தில் வாழைப்பழம், பப்பாசி, பச்சை மிளகாய், பூசணிக்காய் ஆகியவை போதியளவு அறுவடை கிடைக்கப்பெற்ற போதிலும்,COVID- 19 அசாதாரண சூழ்நிலையில் அவற்றை சந்தைப்படுத்துவதில் இடையூறு ஏற்படுவதாக விவசாயிகள் குறிப்பிடுகிறார்கள்.

Related Posts