அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழர்களை நான்காம் தர பிரஜைகளாக்கியுள்ளது: சுமந்திரன்

வலிந்து காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளமையானது, இலங்கை தீவில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகளாக அரசாங்கம் காட்டியுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் இத் திருத்தச் சட்டமூலத்திற்கு எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இத் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால், தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக அன்றி நான்காம் தர பிரஜைகளாகவே அரசாங்கம் காட்டியுள்ளதென சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி இரண்டு அமைச்சுக்களை மத்திரமே நிர்வகிக்க முடியும். எனினும், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு என்ற மூன்றாவது அமைச்சுப் பொறுப்பையும் ஏற்று, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இச் செயற்பாடானது, அரசியலமைப்பை மீறும் செயற்பாடென குறிப்பிட்டுள்ள சுமந்திரன், யார் வேண்டுமானாலும் இதனை உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தலாமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு நிகழும் சந்தர்ப்பத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலம் வலுவிழந்து, குறித்த அலுவலகம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதென சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts