Ad Widget

அமைச்சுப் பதவிகளையோ சலுகைகளையோ பெற்றுக்கொள்ளாது கூட்டமைப்பு! – இரா.சம்பந்தன்

தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பதவிகளையோ, வேறு சலுகைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ நானோ பெறப்போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் இளைஞர் அமைப்புக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியல் தீர்வை நோக்கிய எமது பயணம் எவ்விடத்திலும் தரிக்கப் போவதில்லை. ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன எத்தகைய வெற்றியை அடைந்தாரோ அந்த வெற்றியை உறுதி செய்யும் வகையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் அமையுமென நாம் பலமாக நம்புகின்றோம்.

அவ்வாறு இல்லையாயின் பலமான பாராளுமன்றமொன்றில் மைத்திரியின் அரசாங்கம் அமைவதற்கு நாம் ஆதரவு நல்கவும் தயாராகவுமுள்ளோம்.

மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அரசாங்கமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கமாக அமையுமாயின் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை 2016 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னமே பெற்றுத் தீர்வோமென என்னால் நம்பிக்கையாக கூற முடியும்.

எக்காரணம் கொண்டும் அரசியல் தீர்வை அடையாத வரை எந்தவொரு அமைச்சர் பதவிக்காவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாசித்து நிற்காதென நீங்கள் உறுதியாக நம்பலாம்.

எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென்பதில் நான் மாற்றுக் கருத்துக் கொண்டவனல்ல.

அமைச்சர் பதவியொன்றை எடுக்கும் சாத்திய நிலையொன்று உருவாகுமாக இருந்தால் கப்பல்துறை துறைமுகங்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்பது எனது எண்ணமாகும்.

அந்த நிலை உருவாகுவதற்கு அரசியல் தீர்வைப்பெறும் சாதகமான சூழ் நிலையொன்று உருவாகவேண்டும். உருவாகுமென்ற நம்பிக்கை எமக்குண்டு.

எமது மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் கூறியுள்ளோம். தெற்கில் எமது விஞ்ஞாபனம் பற்றிய சலசலப்பு ஏற்பட்டிருப்பதை நான் அறிவேன்.

எமது உறுதியான நிலைப்பாட்டையும் தெளிவான கொள்கைகளையும் தெற்கிலுள்ள சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நாட்டை பிரியுங்கள் என்று கேட்கவில்லை.

பிளவுபடாத நாட்டுக்குள் நிலையானதும் நிரந்தரமானதும் நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றை தாருங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு கேட்பதற்கு எமக்கு பூரண உரிமையுண்டு.

நாங்கள் இந்த நாட்டில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கின்றோம். வடகிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான பிராந்திய சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கை. அதுதான் எமது உறுதியான நிலைப்பாடுமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை அவர் ஒரு தாராண்மைவாதி, மஹாத்மாகாந்தி, நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் போன்ற உலகத் தலைவர்களின் கொள்கைகளை நான் நேசிப்பவன் அவர்களைப்போல வாழ விரும்புகின்றவன்.

அந்த தலைவர்களின் கொள்கையைப் பின்பற்றி இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளைப் பெற்று வாழ என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ஜனாதிபதி கூறிவருவதை கேட்கின்றோம்.

எனவே தான் இந்த ஜனாதிபதியின் காலத்துக்குள் நிலையான நிரந்திரமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்கள் பெற்று விடவேண்டுமென்பதில் த.தே.கூட்டமைப்பு அக்கறை கொண்டதாக காணப்படுகிறது.

தேர்தல் முடிந்த பின்பு ஏற்படக்கூடிய உள்நாட்டு அரசியல் சூழ்நிலையைக் காட்டிலும் வரவிருக்கும் புதிய அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடிய சவால்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மனித உரிமைப் பேரவையின் அறிக்கையானது செப்டெம்பர் மாதம் அளவில் வெளிவரவிருக்கிறது. ஏலவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்ட மனித உரிமை அறிக்கையானது இன்றைய அரசியல் சூழலில் அதுவும் வரவிருக்கும் புதிய அரசாங்க சூழலில் பாரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவருமென்று நம்பலாம்.

66 வருடகாலமாக மையம் கொண்டிருந்த இனநெருக்கடிகளுக்கு நல்லதொரு விடிவுகாலத்தைப் பிறப்பிக்குமென்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறானதொரு சாத்தியமான சூழலில் வெல்ல முடியாத சர்வதேசத்தால் அறியப்படாத மாற்றுக் கட்சிகளுக்கு உங்கள் வாக்குக்களையிட்டு உங்கள் அரசியல் உரிமைகளை பாழாக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Related Posts