Ad Widget

அமைச்சர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி!

tnaவடமாகாணசபைக்கான அமைச்சர்கள் தெரிவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவுவதனால் அமைச்சர்கள் தெரிவிற்கான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வடமாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புக் காரியாலயத்திலேயே இந்த கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போதே அமைச்சர்களின் பெயர்களை முன்வைக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

அதன்போது, வவுனியா மாவட்ட உறுப்பினர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் குருகுலராஜா ஆகியோரின் பெயர்களை இலங்கை தமிழரசு கட்சியினர் முன்வைத்துள்ளனர்.

அதேவேளை, ரெலோ அமைப்பினர், கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் மன்னார் மாவட்ட உறுப்பினர் குணசீலன் ஆகியோருடைய பெயர்களையும், புளொட் அமைப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடைய பெயரினையும் பிரேரித்துள்ளனர்.

அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக எவருடைய பெயர்களும் முன்வைக்கப்படவில்லையென்பதுடன், அமைச்சுக்கள் எவையென தெரிவிக்கும் பட்சத்தில் யாரை அமைச்சர்களாக பிரேரிப்பதென தீர்மானிக்கவுள்ளதாக அக்கட்சியினர் அக்கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே அமைச்சர்கள் தெரிவு தொடர்பான இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மீண்டும் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Related Posts