Ad Widget

அமைச்சரவையில் கூட்டமைப்பு சேராது

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறந்த வெற்றியைப் பெற்றாலும் அமைச்சரவையில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மாவை, அங்கு மேலும் கூறுகையில், ‘தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தை கொண்டு பேச்சுக்களை நடத்தி மூன்று தொடக்கம் ஆறு மாத காலத்குக்குள் தீர்வு பெறப்படும். கூட்டமைப்பு சிறந்த வெற்றியை பெறுவதன் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க எதிர்வரும் தேர்தல் வழிசமைக்கும் என சர்வதேச சமூகம் நம்புகின்றது’ என்றார்.

‘தேசிய அரசியலுக்கு ஆதரவு அளிப்பது என்பது ஒன்று. அமைச்சரவையில் சேருவது என்பது இன்னொன்று. நாங்கள் எப்பவுமே அமைச்சரவையில் சேர மாட்டோம் அதற்கான சந்தர்ப்பம் வராது’ என அவர் கூறினார்.

‘மஹிந்த ராஜபக்ஷ குடும்பம், குடும்ப ஆட்சி மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக குற்றசாட்டுகள் உள்ளன. அத்துடன் சர்வதேச போர் குற்ற விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர். அவர் அவ்விடயங்களில் இருந்து தப்புவதற்காவே ஜனாதிபதி தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான இடம் கிடைக்குமா என்பது சர்ச்சைக்கு உரியதாகவும் குழப்பமாகவும் உள்ளது. சுதந்திர கட்சி பிளவுபட்ட நிலையில் தேர்தலில் பங்குபற்றுவதற்காக சந்தர்ப்பங்கள் உள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி ஒன்றிணைந்து அவர்கள் பெருபான்மையை பெறாத போது தமிழ் மக்களின் ஆதரவை பெற வேண்டிய நிலை ஏற்படும்.
அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு, அகதி வாழ்வுக்கு தீர்வு, நில பிரச்சனைக்கு தீர்வு மீள் குடியேற்ற பிரச்சனை, சிறையில் உள்ளவர்களை விடுவித்தல், போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ள முடியும்’ என மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.

Related Posts