Ad Widget

‘அமிர்தலிங்கம் கொலையை கண்டித்திருந்தால் பலர் பாதிப்படைந்திருக்கலாம்’: சம்பந்தர்

sampanthanஇலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் நிலவியிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆனால் ‘அந்த மௌனத்திலிருந்து அமிர்லிங்கத்தின் பெறுமதியை தமிழ் மக்கள் அல்லது அவரின் அரசியல் சகோதரர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்று கூறமுடியாது’ என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

அமிர்தலிங்கத்தின் மறைவு தமிழர்களுக்கும் தமிழர் போராட்டத்திற்கு பெரும் இழப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

‘அமிர்தலிங்கம் அண்ணனின் காலத்தில் கூட தமிழீழம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்திலிருந்து நாங்கள் மாறியிருந்தோம்’ என்றும் தெரிவித்தார் சம்பந்தன்.
தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போதியளவு சுயாட்சியுடன் அரசியல் தீர்வுத் திட்டம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது அரசியல் தலைமைகள் இயங்கிவந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

‘அந்த அடிப்படையில் தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 13-ம் அரசியல் சாசனத் திருத்தம் ஏற்பட்டது. அதை முழுமையான தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அது ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட ஒரு படி என்பதையும் நாங்கள் உதாசீனம் செய்யமுடியாது’ என்றும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் 1956-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அமிர்தலிங்கம், 1972-ம் ஆண்டில் தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1977-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றிருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் மறைந்த 25 ஆண்டு நினைவு நாளை லண்டனில் இன்று சனிக்கிழமை அனுஷ்டித்தது.
இதில் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான டாக்டர் ஜயம்பதி விக்ரமரட்ண, ‘இலங்கையில் அரசியல் அதிகாரப்பகிர்வு’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார்.

Related Posts