Ad Widget

அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க இளைஞர் அணி அவசியம் – டக்ளஸ்

எமது மக்களின் அபிவிருத்தி போன்ற வாழ்வாதார செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் சிறப்பாக முன்னெடுப்பதற்கு இளைஞர் அணி அமைக்கப்படுவது அவசியமும் காலத்தின் தேவையாகுமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று (14) தெரிவித்துள்ளார்.

chava-1

சாவகச்சேரியில் அமைந்துள்ள தென்மராட்சி கலைமன்றத்தில் கலாசார மண்டபத்தில் சாவகச்சேரி இளைஞர் அணியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்பிரதேசத்தில் இவ்வாறானதொரு இளைஞர் அணியை கட்டியெழுப்புவதில் முன்னின்று உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் சரியான அரசியல் வழிநடத்தல் இல்லாத காரணத்தினாலேயே மக்கள் சொல்ல முடியாத அழிவுகளை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

அவ்வாறானதொரு அழிவுகளும் இழப்புகளும் எதிர்காலத்திலும் நிகழாது இருக்க இப்படிபட்ட இளைஞர் அணிகள் அமைக்கப்படுவது அவசியமானதும் காலத்தின் தேவையுமாகும்.

இன்று நீங்கள் எதிர்ப்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களுடன் வருகைதந்துள்ளரீர்கள் அந்தவகையில் உங்களது மகிழ்ச்சியும் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறும்.

இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இவ் இளைஞர் அணி எமது மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளை சரியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

அவ்வாறு எல்லோரும் ஒன்றிணைந்து உங்களது பங்களிப்பை மக்கள் நலன்சார்ந்து வழங்குகின்ற போதே மக்களுக்கான சேவைகள் யாவையும் முழுமைப்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இவ் இளைஞர் அணியூடாக முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்களுக்கு முழுமையான பங்களிப்பும் ஆதரவும் வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.

இவ் இளைஞர் அணியில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 200 வரையான இளைஞர் யுவதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

பிரதேச முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களை வலுப்படுத்தி மேம்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக பிரதேச ரீதியாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

chava-2

இதன்போது அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன், ஈ.பி.டி.பியின் தென்மராட்சி இணைப்பாளர் சாள்ஸ், ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts