Ad Widget

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது.

இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு, தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த அன்னையை நினைவுகூர்ந்தனர்.

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி, 31 நாட்கள் போராடி ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர்நீத்தார்.

கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படாத நிலையில், இம்முறை பல்வேறு தரப்பினரும் அன்னை பூபதியை நினைவு கூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts