Ad Widget

அனைவரும் ஒன்றுபட்டு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் – நல்லை ஆதீனம்

100 நாள் திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவித நலனையும் செயற்படுத்தவில்லை என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உள்ளது. எனவே இந்த புதிய அரசின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையினை ஒன்றுபடுத்தி தமிழினத்திற்கு உரிய விடிவினை மிகவிரைவாக பெற்றுத்தருவதே தந்தைக்கு செய்யும் அஞ்சலி என நல்லை ஆதீன குரு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தை செல்வாவின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ். பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள அவரது சதுக்கத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஆசிச்செய்தி வழங்கும் போதே அவர் இந்த வேண்டுகொளை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழை தனது சிந்தனையில் கொண்டு செயற்பட்ட தந்தையின் நினைவு நாளில் நாம் கூடியுள்ளோம். இந்த இடத்தில் தந்தைக்கு என நிரந்தர மண்டபம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் .

தமிழகத்தில் இருந்த பல அறிஞர்களுடைய நினைவிடங்கள் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல எனது தந்தையினுடைய நினைவாலயமும் அமைய வேண்டும். இதில் எவருக்கும் ஆட்சேபனையும் இல்லை. சொல்லும் செயலுமாக வாழ்ந்தவர் தந்தை . இதனால் தமிழ் இசை நாதஸ்வர இசையிலேயே அவரது இறுதி ஊர்வலமும் நடைபெற்றது என்பதனை யாரும் மறந்துவிட முடியாது.

தந்தை மதத்திற்கு மட்டும் பெரியவனாக இல்லாது இனத்திற்கும் பெரியவனாக வாழ்ந்தவர். தந்தை விட்டிருக்கின்ற பணியை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

அத்துடன் எங்களுடைய ஒற்றுமை பலமாக இருக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வோம் என்ற சிந்தனையினைக் கருத்திற் கொண்டு ஒற்றுமையினைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

100 நாள் திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவித நலனையும் செயற்படுத்தவில்லை என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உள்ளது.

எனவே இந்த புதிய அரசின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையினை ஒன்றுபடுத்தி தமிழினத்திற்கு உரிய விடிவினை மிகவிரைவாக பெற்றுத்தருவதே தந்தைக்கு செய்யும் அஞ்சலி ஆகும்.

தந்தையின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்றால் அவருடன் வாழ்ந்தவர்கள், அவரை அடியொற்றி வாழ்பவர்கள், அவர் விட்டுச் சென்ற பணியை இந்த தமிழ் மக்களுக்கும் மண்ணுக்கும் தருவதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பல கேள்விகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குரிய பதிலை வழங்குவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. எனவே அனைவரும் ஒன்றுபட்டு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும்

Related Posts