பெளத்தமத பீடத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு நாளிலேயே இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்த கலாநிதி ஆறுதிருமுருகன் நாட்டில் உள்ள அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்பதன் மூலம்தான் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சர்வமத மாநாடு அன்பு, கருணை இரக்கம் என்ற அடைமொழிகளைக் கொண்ட மதங்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இத்தகைய சர்வமத மாநாடு நடாத்துவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். உயர்ந்த சிந்தனையுடன் இத்தகைய சபை உருவாகியது, பாராட்டுக்குரியது.
சர்வமத மாநாடு சகல மதங்களையும் முன்னிலைப் படுத்துவதோடு சகல மதத்தவர்களுக்கும் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகளை தீர்த்துவைக்கக்கூடியனவாக இந்த மாநாட்டு விடயங்கள் செயற்படவேண்டும்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண நாகவிகாராதிபதி உரையாற்றினார். அவர் எல்லா சமய நிகழ்வுகளுக்குச் செல்பவர். எங்களுடைய விழாக்களிலும் கலந்துகொள்பவர். அதேபோல் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் இருக்கிறார்கள்.
இந்த நாட்டில் இருக்கிற மதங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட மதம் என்றால் அது சைவ மதம்தான். இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்ட காலம் முதல் பாதிக்கப்பட்ட மதம் சைவமதம். இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள். பல கோவில்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அழிக்கப்பட்டுள்ளன. எவ்வளவோ மக்கள் இந்த போரில் மரணத்தை சந்தித்தார்கள். குழந்தைகள் முதல் மூத்தோர் வரை இறந்தார்கள். இன்றைக்கு மதத்தலைவர்கள் தான் இந்த நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதனாலேயே சர்வ மத தலைவர்கள் கூடியுள்ள இந்த சபையினரை வாழ்த்துவதோடு, நான் கேட்பது, இலங்கையில் இருக்கின்ற மதத்தலைவர்கள் உடனடியாக நீண்டகாலமாக நாட்டில் இருக்கின்ற பிரச்சினையை தீர்க்க வேண்டும். இதற்காக யார் அரசாங்கத்தில் இருக்கிறார்களோ அவர்களிடம் வலியுறுத்தவேண்டும்.
சைவ மக்களை பொறுத்தவரை, பிற மதத்தவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். போர்ச்சூழலில் சைவ மக்கள் வறுமையிலும் போரின் அனர்த்தத்திலும் இருக்கின்றபோது ஆயிரக்கணக்கானவர்கள் மதம் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். புதிய புதிய மதகுழுக்கள் போர் நடைபெற்ற இடங்களுக்கு வந்து சில வசதிகளை செய்துவிட்டு அவர்களை மதம் மாற்றி இருக்கிறார்கள். அது எல்லோருக்கும் பரவலாக தெரிந்த விடயம். இது குறித்து மிகுந்த கவலை அடைகிறோம்.
சைவ மக்களை பொறுத்தவரையில் நாங்கள் ஒருநாளும் அறைகூவல் விடவில்லை. எங்கள் மதத்துக்கு வாருங்கள் என்று கேட்பதில்லை. எல்லா மதத்தையும் மதிப்பவர்கள். நான் எல்லா மதத்தவர்களின் நிகழ்வுகளுக்கும் சென்று உரையாற்றுபவன்.
35 வருட யுத்தத்திற்கு பின்னராக அழிக்கப்பட்ட பொளத்த கோவில்கள் கட்டப்பட்டுவிட்டது. நீண்டகாலமாக பெளத்த விகாராதிபதி இங்கு பணியாற்றுகிறார். வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலை காங்கேசன்துறையில் இருந்த ஆதிச் சிவன் கோயில் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக எத்தனையோ கோவில்கள், மடங்கள் என பல வரலாற்று பிரசித்தி பெற்ற இடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
யுத்தம் முடிந்து எத்தனை வருடங்களாகிவிட்டது. இன்று வரைக்கும் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்… இன்னமும் அனுமதியில்லை. இங்கு வரும் அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள் வரும்போது எமது ஆலயங்களை, பிரசித்திபெற்ற இடங்களை விடுவிக்க கோரினோம். சரி என்பார்கள், விடுவிப்போம் என்பார்கள். ஆனால், அவை நடந்தபாடில்லை.
பெளத்த மதம் ஒரு அரிய மதம். பௌத்த மதத்தலைவர்கள் நினைத்திருந்தால் இந்த நாட்டுப் பிரச்சினையை ஒரு நாளில் தீர்த்திருக்கலாம். உரிமைகள் எல்லோருக்கும் சமம் என்று கொடுத்திருந்தால் தமிழ் மக்களோ இஸ்லாம் மக்களோ சிங்கள மக்களோ இந்த போரில் அழிந்திருக்கவேண்டிய தேவையில்லை.
இன்றைக்கும் மத வலிமையோடுதான் இந்த நாடு இருக்கிறது. இந்த நாட்டின் பெளத்த பீடத்தில் உள்ளவர்கள் இனப்பிரச்சினையை தீர்க்க நினைத்திருந்தால், எல்லா மதத்தவர்களையும் அழைத்து ஆட்சியில் உள்ளவர்களுடன் கதைத்து ஒரு நாளில் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தால் இந்த மண்ணில் உயிர்களை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
அரசியல்வாதிகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு பேசிக்கொள்வார்கள். அது சிங்களவர்களாக, இஸ்லாமியர்களாக, தமிழர்களாக இருக்கலாம். அரசியலுக்காக பேசிக்கொண்டிருப்பார்கள். இங்கு எத்தனையோ மத மாநாடுகள், சமாதான மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் அறுவடை என்னவென்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.
மன்னாரில் சிவராத்திரி வளைவு வீழ்த்தி நசுக்கியபோது யாழ். ஆயர் மட்டுமே அதற்கு எதிராக குரல் கொடுத்தார். ஏனைய மதத்தவர்கள் மெளனம் சாதித்தார்கள். எமக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த மதத்தவர்களையும் புண்படுத்தவோ, ஏளனம் செய்கிற வேலைகளை யாரும் செய்யக்கூடாது. சைவமக்கள் உயர்ந்த சிந்தனையுடன்தான் இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் வெறுத்தது கிடையாது.
யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற பெளத்த மதகுருமார் நல்லூர் முருகனை வணங்குகிறார்கள். சந்தோஷம். நைனாதீவு விகாராதிபதி எவ்வளவோ நல்ல விடயங்களை கூறிவருகிறார். அங்கு பெளத்தமும் சைவமும் ஒற்றுமையாக இருந்துவருகிறது. ஏன் அந்த ஒற்றுமையை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியவில்லை என்று நைனாதீவு விகாராதிபதி விடுத்த வேண்டுகோள் பலமான வேண்டுகோள்.
இங்கு பொலிஸார், பெளத்த மதத்தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் கேட்கிறேன். நாங்கள் பெளத்தர்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் பெளத்தர்கள் இல்லாத இடத்தில் 35 வருடங்களுக்கு மேலாக காணி உரிமையாளர்கள் காணியை பார்க்க முடியாதவர்களாக இருக்கும் போது விகாரையை கட்டி அந்த மக்களை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயமானது.
பெளத்த கோயிலை உங்கள் இடத்தில் கட்டுவதற்கு யாரும் எதிர்ப்பில்லை. மக்களின் காணியை அபகரித்து கட்டியதை உண்மையான பெளத்தன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
21ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டில் வாழ்பவர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால், இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றால் மதத்தலைவர்கள் ஒன்றுகூடுங்கள், சமாதான குழுக்கள் உடைந்து போய்விட்டன, பேச்சுவார்த்தைகள் பலனற்றுப் போய்விட்டன, சிறைக்கூடங்களில் எத்தனை பேர் இருக்கிறார்கள்! மதத்தலைவர்கள் ஒன்றுகூடி அரச தலைவர்களுடன் கலந்துரையாடலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்க கோரலாம். யுத்தம் முடிவடைந்துவிட்டது. சிறையில் இருப்பவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து குடும்பத்துடன் இணைத்துவிடுங்கள். பிள்ளைகள், உறவினர்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.
அன்பு, கருணை, இரக்கம் காட்டுங்கள் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. மதங்களின் பெரிய அடையாளம் மன்னிப்புதான். மன்னிக்காத உலகத்தில் மதங்களைப் பற்றி பேசி பயனில்லை. வடக்கில் யுத்த அழிவுகள் குண்டுமழைகள் ஆலயங்கள், பாடசாலைகள் மீது வீழ்ந்தபோது குரல் கொடுக்காதவர்கள், அந்த குண்டுமழைகள் தங்கள் மீது வீழ்கின்றபோது குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் எங்கு அழிவு நடந்தாலும் குரல்கொடுப்பவர்கள். இந்த நாட்டின் இனப்பிரச்சினை தீரவேண்டும் என்றால் மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.