Ad Widget

அனைத்து நாடுகளினதும் உதவிகளை பெறுவதே எமது வௌிநாட்டு கொள்கை – ஜனாதிபதி

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை, அனைத்து நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலானதாகும் என்றும் இலங்கை அதன் அபிவிருத்திச் செயற்பாடுகளில் எல்லா நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

my3

ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் செயன்முறையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று பிரித்தானியாவின் பாதுகாப்புத் தலைமையகத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் மைக்கல் பெலனை சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்சம், சந்தேகமில்லாது மக்கள் வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவதற்காகவே இலங்கை மக்கள் தன்னை தெரிவு செய்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏழை, பணக்காரர்களுக்கிடையிலான வருமான இடைவெளியையும் குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச மன்றங்களிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் பிரித்தானியாவின் உதவியை இலங்கை எதிர்பார்க்கிறது. நாட்டின் மிகப் பெரும் சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் தொல்லையை ஒழித்துக் கட்டவும் பிரித்தானியாவின் ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்துள்ள போதிலும் வடக்கு, தெற்கு மக்களிடையே நல்லெண்ணமும் நட்புறவும் முன்னேற்றமடையவில்லை. எனவே எல்லா சமூகங்களுக்கு மத்தியிலும் புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தற்போதய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கல் பெலன் போதைப்பொருள் தொல்லையை ஒழித்துக்கட்ட இலங்கைக்கு உதவ தனது நாடு தயாராகவுள்ளதாகக் குறிப்பிட்டதுடன் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும் எனத் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டங்களையும் அவர் பாராட்டினார். அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தியா மற்றும் சீனாவுடனான இலங்கையின் உறவுகள் குறித்தும் அவர் வினவினார். இந்தியா இலங்கையின் அயல்நாடு எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது நாட்டுக்கு சீனா ஒரு சிறந்த நண்பன் என்றும் தெரிவித்தார்.

Related Posts