Ad Widget

அனந்திக்கு புனர்வாழ்வு என்பது முட்டாள்தனமான யோசனை – மனோ

manoபிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம் சாட்டி,மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளிக்கும் யோசனையை முன் வைத்த நபருக்கு அங்கொடை வைத்தியசாலையில் மனநோய் மருத்துவம் செய்விக்க வேண்டும். இது சர்வதேச கண்டனத்தை தேடி கேட்டு வாங்கி பெறும் முட்டாள் யோசனையாகும்.

ஜனநாயக நடைமுறைகள் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத இராணுவ நபர்களை ஆலோசனை சொல்ல பக்கத்தில் வைத்து கொண்டால் அவர்கள் இப்படித்தான் யோசனை சொல்வார்கள். மேல்மாகாணத்தில் தேர்தல் நடத்த போகின்றீர்கள். வடக்கில் நடத்திய தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மக்கள் பிரதிநிதியை கைது செய்வதாக பயமுறுத்துகிறீர்கள். இத்தகைய ஆலோசகர்கள் மூலமாகத்தான் அரசாங்கமும், நாடும் சர்வதேச ஆபத்து சிக்கலில் தேடி போய் விழுகின்றன. இதைதான் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது என்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தெஹிவளை ஸ்டபர்ட் ஒழுங்கை தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நமது கட்சி நாட்டு பிரிவினையை எதிர்க்கிறது. பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்யப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் யார் பிரிவினைவாதி என்ற கேள்வி இங்கே எழுகிறது.

காணாமல் போன தனது கணவனையும், மனைவியையும், பிள்ளைகளையும் தேடி அலைபவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. இந்த நாட்டில் மக்களை இன, மத ரீதியாக பிரித்து ஆள நினைப்பவர்கள்தான் பிரிவினைவாதிகள் ஆகும்.

சகோதர இனத்தின் உரிமைகளை பறித்து எடுப்பவர்களும், சகோதர மதத்து மக்களின் வழிபாட்டு உரிமைகளையும் மறுப்பவர்களும்தான் பிரிவினைவாதிகள். இந்த நாட்டில் இந்து கோவில்களையும், இஸ்லாமிய பள்ளிவாசல்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் உடைப்பவர்கள் யார்? ஒரு ஒழுங்கைக்கு தமிழ் பெயர் வைப்பதையும், இஸ்லாமியர்கள் தங்கள் உணவு பழக்க வழக்கங்களை கொண்டு நடத்துவதையும், கிறிஸ்தவர்கள் தங்கள் பிரார்தனை கூட்டங்கள் நடத்துவதையும் தடுத்து நிறுத்துபவர்கள் யார்? இவர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள் ஆகும்.

இந்த நாட்டில் தொன்று தொட்டு இனவாதம் பேசி சிறுபான்மை இனங்களை பிரிவினைவாதத்தை நோக்கி தள்ளி விடுபவர்களே பிரிவினைவாதிகள் ஆகும். இவர்களுக்குதான் இன்று புனர்வாழ்வு தேவைபடுகிறது. முன்னாள் புலிகள் இயக்கத்து நபர்கள் என்று பார்த்தாலும் கூட, அவர்களில் மிகப்பிரபலமானவர்கள் இன்று அரசாங்கத்துக்குள்ளேதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்குங்கள். ஆனால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை கைது செய்து புனர்வாழ்வு வழங்க வேண்டி வரும் என்று கூறி, சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகி, மிச்சம் இருக்கும் நாட்டின் பெயரையும் நாசமாக்காதீர்கள்.

இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டும் அல்ல, நல்லெண்ணம் கொண்ட சிங்கள பௌத்த மக்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி

நான் போராளியல்ல, எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது – அனந்தி

Related Posts