Ad Widget

அந்தியட்டிக்கு செல்ல விளக்கமறியலில் உள்ள சகோதரனுக்கு அனுமதி

judgement_court_pinaiகோண்டாவில் பகுதியில் ஜுன் மாதம் 16ஆம் திகதி வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொலையுண்டவரின் சகோதரனான ரவீந்திரன் செந்தூரனை, இறந்தவரின் அந்தியட்டிக் கிரியையில் கலந்துகொள்வதற்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் அனுமதி வழங்கினார்.

இறந்தவரின் அந்தியட்டிக் கிரியை எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளமையினால் அதில் கலந்துகொள்வதற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சகோதரனுக்கு அனுமதி வழங்கும் படி, அவர்களது சட்டத்தரணி மன்றில் முன்வைத்த கோரிக்கையினையடுத்தே நீதவான் அனுமதியினை வழங்கினார்.

மேலும், சகோதரனை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

ஜுன் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் கோண்டாவிலைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (வயது 19) என்பவர் பலியாகியிருந்ததுடன், அவரது சகோதரர்களான ரவீந்திரன் லக்ஷணா (வயது 26), ரவீந்திரன் செந்தூரன் (வயது 23) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

பலியாகிய சுகிர்தன் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் அவ்வீதியின் வழியாகச் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சுகிர்தனினை காலால் உதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த சுகிர்தனின் உறவினர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்காரர்களைத் துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர்.

இதில் உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (வயது 20), எம்.நிராஜன் (வயது 23) ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த இருவரின் உரும்பிராய் நண்பர்கள், 7 மோட்டார் சைக்கிள்களில் அன்று இரவு சுகிர்தனின் வீட்டிற்கு சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சுகிர்தன் பலியாகியதுடன், சகோதரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்ததில், றொபின்ராஜ், நிராஜன் ஆகியோரினை அடித்துப் படுகாயமடையச் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட சுகிர்தனின் சகோதரர்களான செந்தூரன், சாரங்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சாரங்கன் கடந்த 10ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கொலைச் சம்பவத்தினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் உரும்பிராய் சிவகுல வீதியினைச் சேர்ந்த யோகராசா ஜெனார்த் (வயது 24) என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts