Ad Widget

அந்தரத்தில் குழுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம்; 5 ஊழியர்கள் காயம்

பிரான்ஸின் பெரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மேற்படி விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

சம்பவத்தின் போது குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 ஊழியர்களும் பயணித்துக்கொண்டிருந்தனர். வளிமண்டலத்தில் காணப்பட்ட மந்தநிலை காரணமாக விமானம் குழுங்கியதால் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று அதிகாலை 5.21 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன்பின்னர், விமானத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்கள், விமான நிலைய வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார். ஏனைய நால்வரும், மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தீபால் பெரேரா கூறினார்.

Related Posts