Ad Widget

அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெறாது! ராஜித

தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் வைத்திருந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்களை தமது சொந்த நிலங்களைபோல் பாவித்தனர்.

அதேபோல் அனாவசிய இராணுவ முகாம்களை அமைத்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கியும் தமது ஆதிக்கத்தை தக்க வைத்திருந்தனர். எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கிலும், கிழக்கிலும் அனாவசிய இராணுவ முகாம்கள் அனைத்தையும் நீக்கி பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

எனினும் வடக்கிலும், கிழக்கிலும் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் இல்லை. நாம் ஜனாநாயக ரீதியில் இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நாட்டில் சகல பகுதிகளிலும் மூவின மக்களும் வாழ உரிமை உள்ளது. அதேபோல் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யுத்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்ட சிங்கள் மக்களின் நிலங்களை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

எமது அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றும். நாம் வடக்கில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இப்போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுதான் வருகின்றது.

தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் தமிழ் மக்களின் உரிய நிலங்களில் அத்துமீறிய சிங்கள் குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது. இந்த விடயத்தில் யாரும் எம்முடன் முரண்பட்டு சர்வதேச தரப்பை நாடவேண்டிய தேவை இல்லை.

முன்னைய அரசாங்கத்தை போலவே எம்மையும் கருதி செயற்படாது எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் தயாராக வேண்டும்.

மேலும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை அரசாங்கம் எமது பொறிமுறைக்கு அமைய மேற்கொண்டு வருகின்றது. கடந்த காலத்தில் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்கு மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல் இந்த விசாரணைகளின் போதும் நாம் பொதுமக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி உண்மை சாட்சியங்களை சேகரித்து வருகின்றோம். எனினும் இந்த விவகாரங்களில் எவரதும் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமையவும் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.

அதேபோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அல்லது அவர்களின் தேவைக்காகவோ எம்மால் அனாவசியமாக எதையும் மேற்கொள்ளவும் முடியாது.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்டதிட்டங்களுக்கு அமையவே விசாரணை பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை நாம் சரியான முறையில் நிறைவேற்றுவோம். அதேபோல் உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையும் இந்த அரசாங்கத்தில் முழுமையடையும் என அவர் தெரிவித்தார்.

Related Posts