Ad Widget

அத்தியாவசிய சேவைகளுக்கு தடை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயல் : இரா. சம்பந்தன்

அத்தியாவசிய சேவைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அத்தியாவசிய மக்கள் சேவைகள் சட்டத்தின் கீழான ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. கூட்டு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் கும்பல், வேலை நிறுத்தங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். இவை தொடர்பில் அரசாங்கம் தைரியமாக தீர்மானங்களை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மக்களின் ஆணையை மதிக்க வேண்டுமென்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கூட்டு எதிர்க்கட்சி நாட்டுக்குள் தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதை தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில் சகலரும் நாட்டை கட்டியெழுப்ப ஐக்கியப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் திரு.மைத்திரிபால சிறிசேனவை மக்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தார்கள். திரு.மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் நிராகரித்ததை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அவர் அமைச்சுப் பதவிக்கும் பொருத்தமற்றவர் என கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் முடிவு செய்தார்கள் என்றும் கூறினார்.

மக்கள் ஆணைக்கு மாறாக ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் கூட்டு எதிரணியின் முயற்சிக்கு ஒரு போதும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை அத்தியாவசிய சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts