Ad Widget

அதிவேக நெடுஞ்சாலையில் சுமந்திரனின் வாகனம் விபத்து!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில், கல்முனை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பங்கேற்பதற்காக சென்ற போது, வாகனம் விபத்தில் சிக்கியது.

இன்று காலை கட்டுநாயக்கவிற்கு அண்மையில், அதிக வேக நெடுஞ்சாலையிலேயே வாகனம் விபத்துக்குள்ளாகியது.

வாகனம் நெடுஞ்சாலையில் சறுக்கி, வீதியின் இருபக்க காப்பரண்களிலும் பல தடவைகள் மோதிய நிலையில்,
வாகனம் மீளப் பயன்படுத்த முடியாத வகையில் மோசமாகச் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரோடு பயணித்தவர்கள் காயங்களின்றி, தப்பியுள்ளனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில், அம்பாறை கல்முனை நீதவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை மீறினார்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு, அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கானது இன்றைய தினம் கல்முனை நீதிவான் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொலிஸார் தொடுத்துள்ள வழக்கில் எதிராளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகவுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எதிராளிகள் மன்றில் முன்னிலையாகும் போது பிணை அல்லது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை நீதிவான் நீதிமன்றில் தொடர்வதற்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டு, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த வழக்கு, நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கல்முனை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பில், கல்முனை நீதிவான் நீதிமன்றம் மேற்கொண்டு
உத்தரவுகள் எதனையும் எதிர்வரும் மே 18ஆம் திகதி வரை வழங்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்முனை நீதிவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி சட்ட சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts