Ad Widget

அதிபர் இடமாற்றத்தை கண்டித்து வல்வை சிதம்பரா கல்லூரி மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், நேற்று திங்கட்கிழமை (06) வகுப்பு புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திங்கட்கிழமை (06) காலை பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள், பாடசாலை கதவினை மூடி பதாகைகளினை ஏந்தியவாறு, அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல் தலைவரின் தலையீடு இப் பாடசாலையில் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் அரசியல் தலையீடு காரணமாக ஐந்து மாதத்துக்கு ஒரு அதிபர் என இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இவ் இடமாற்றமும் அரசியல் தலையீடுகளினால் வழங்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும், இப்பாடசாலையின் அதிபரான கிருஸ்ணபிள்ளை இராசதுரை பாடசாலையில் தொடர்ந்து மூன்றரை வருடங்கள் கடமையாற்றி வருகிறார். இவருடைய காலப்பகுதியில் பாடசாலை கல்வி வளர்ச்சியிலும் அபிவிருத்தியும் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.

இதனால் பாடசாலை அதிபரின் இடமாற்றத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வடமராட்சி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.நந்தகுமாரிடம், ‘அதிபரின் இடமாற்றத்தினால் நாம் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரபரீட்சை மற்றும் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால், இத் திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் கருத்தினை கேட்டறிந்து கொண்ட கல்விப்பணிப்பாளர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அதிபரின் இடமாற்றத்தினை இரத்து செய்வதாக உறுதியளித்தார்.

Related Posts