Ad Widget

அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை

‘எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது’ என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala-sirisena

‘இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். நான் பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் அகற்ற மாட்டேன்’ என்றும் அவர் கூறினார்.

திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது’ என்றும் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம். எமது வெற்றி உறுதி’ என்றார்.

அத்துடன், ‘நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்து கொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம். இந்த நாட்டை பிளக்கவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் மூன்று நாட்களில் கடுமையான தேர்தல் வன்முறைகளில் ஈடுபட ஆளுந்தரப்பு முயற்சித்து வருகின்றது. நாம் சமாதானமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்கிறோம். பாரிய வெற்றியுடன் நாம் புதிய யுகத்தைப் படைப்போம்’ என்றார்.

‘பௌத்த மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். பதவிக்கு வந்த பின்னர் நாட்டைப் பிளவுபடுத்த புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு பொய்யானது. நாம் எவருடனும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை’ என்றும் சிறிசேன இதன்போது உறுதியளித்தார்.

Related Posts