Ad Widget

அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்! – சம்பந்தன்

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் சபையாக பாராளுமன்றம் அமையவுள்ளதோடு தீர்வைத்தரும் ஆண்டாக இவ்வருடம் அமைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் என்ற விடயங்கள் தொடர்பில் மக்களுடனான கலந்துரையாடலொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நியாயமான அரசியல் தீர்வொன்று புதிய அரசாங்கத்தால் முன்வைக்கப்படுமென த.தே.கூ. நம்பிக்கை கொண்டுள்ளது. அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் நாம் ஏற்போமென யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் இன்றைய நிலைப்பாடுகள் எமக்கு திருப்தி அளிப்பதாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைகின்றன. பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றும் இன்றைய கைங்கரியமானது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டுவதாக அமைகிறது. அரசியல் அமைப்பு சபைக்கு தமிழ் மக்கள் சார்பில் யாரும் தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும். அந்த ஆலோசனைகள் ஆரோக்கியம் கொண்டதாக அமைவதுடன் தென்னிலங்கை சக்திகளை குழப்பாமல் கூறப்படுமானால் நன்மை தரும்.

குறிப்பாக சிங்கள மக்களையும் சிங்களத் தலைவர்களையும் குழப்பாமல் நாங்கள் இத்தீர்வைத் தான் விரும்புகிறோமென்று கூற விரும்புகின்றவர்கள் கூறட்டும். இதற்கு கூட்டமைப்பு ஆலோசனை தெரிவிக்கப் போவதில்லை. எல்லோருடைய ஆலோசனைகளையும் நாங்கள் உள்வாங்குவோம் நிராகரிக்கமாட்டோம்.

யாழ்ப்பாணத்தில் காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது சில பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்தேன். பல இடங்களில் இராணுவமும் இல்லை மக்களின் குடியிருப்புக்களுமில்லை. ஆனால் வேலி போட்டு அடைக்கப்பட்டிருக்கிறது. அக்காணிகள் யாராலும் பயன்படுத்தப்படவில்லை.இவ்விடயம் தொடர்பில் நான் ஜனாதிபதியைச் சந்தித்து இராணுவம் பயன்படுத்தாத காணிகளை உடனே விடுவியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு அமையவே அண்மையில் காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகின்றன.

வலிகாமம் உள்ளிட்ட முழுப்பிரதேசங்களில் இவ்வாறு இருக்கும் காணிகளை அதானிக்க முடிந்தது. இவ்வாறு விடுவிப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதன் நிமித்தமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய ஜனாதிபதியைப் பொறுத்தவரை சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டுமென்பதை வெளிப்படையாக கூறிவருகிறார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதே போன்றே முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டிவருவதானால் நல்லதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி வாழும் சூழ்நிலையொன்று உருவாக்கப்பட வேண்டும். அதிகாரங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே அரசாங்கத்திடமிருந்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றையும் புறந்தள்ளி எமது மக்கள் இருந்து வந்துள்ளார்கள். எம்மக்கள் எவ்வளவோ விடயங்களை இழந்துள்ளார்கள், அழிந்துள்ளார்கள். நல்லதொரு அரசியல் தீர்வைப் பெற வேண்டுமென்பதற்காகவே அனர்த்தங்களை அனுபவித்து அட்டூழியங்களைப் பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். எனவே அதிகாரம் அற்ற தீர்வு கிடைக்குமாயின் அத்தீர்வினால் எந்தப் பலனையும் எமது மக்கள் அடையப் போவதில்லை.

இது விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாரம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. ஜனாதிபதி திறந்த மனதுடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அனைத்து சமூகங்களையும் திருப்திபடுத்த வேண்டும், நல்லிணக்கம் காணப்பட வேண்டுமென்பதற்காக உழைத்து வருகின்றார். எந்தவொரு தீர்வும் 2016 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு வரப்பட வேண்டும், கொண்டு வரப்படவில்லையாயின் தமிழர் பிரச்சினைக்கு முடிவு காணப்படமுடியாத சூழ்நிலையே இலங்கையில் உருவாகும். இக்கருத்தை நான் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடனேயே எடுத்துக் கூறியுள்ளேன். பிரதமருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன்.

இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் நிர்ணய சபைத் தீர்மானமானது நீண்டகால தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உதவும் என நம்புகிறேன். சில நாடுகளில் இனரீதியான, மொழி ரீதியான மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சில ஒழுங்குகள் இருக்கின்றன. வெவ்வேறு இனத்தை, மொழியைச் சார்ந்த மக்கள் தமக்கான சுய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அலகுகள் பிரிக்கப்படுவதற்கு சந்தர்ப்பங்களும் வழிமுறைகளும் உண்டு.

பெல்ஜியத்தில் வடபுலமாக டச் மொழி பேசும் மக்கள், தென்புலமாக பிரான்ஸ் மொழி பேசும் மக்கள், மேற்கு புறமாக ஜேர்மன் மொழி பேசும் மக்களும் இருக்கின்றார்கள். எனவே பிரதேச ரீதியாக இந்த மக்களுக்கு சுயாட்சியுண்டு. பிரான்ஸ் பேசும் மக்கள் மத்தியில் டச் பேசும் மக்களும் டச் பேசும் மக்கள் மத்தியில் பிரான்ஸ் பேசும் மக்களும் கூட வாழுகின்றார்கள். இங்கு இனரீதியாக, மொழி ரீதியாக அதிகாரங்கள் கொண்ட கவுன்சில்கள் உள்ளன. இவ்வித அதிகாரப் பகிர்வின் மூலமாக பிரதேச ரீதியாக மாத்திரமல்ல இனரீதியாக, மொழிரீதியாக அவர்கள் திருப்தி காணும் வகையில் சுயாட்சி வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்று பல நாடுகளில் உண்டு.

இவ்விதமான ஒழுங்கை நாம் மேற்கொள்ள முடியும். பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது வடமாகாணம் ஒரு பிராந்தியம். கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்தியங்கள். மாகாண எல்லைக்கு அப்பால் பிராந்தியங்கள் இணைய முடியாது என்பதுதான் அவ்வெப்பந்தத்தில் கூறப்பட்ட விடயமாகும். மாகாணங்களுக்கு உள் இணையலாமென்பது அதன் சாரம்சமாகும். ஆரம்பத்தில் எவ்விதமாக இணைப்பு மேற்கொள்ளப்பட்டதோ அதே போன்றதொரு நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவினால் இழைக்கப்பட்ட தீங்குகள் புதிய அரசாங்கத்தால் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.

Related Posts