Ad Widget

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாம் வேலை செய்யவில்லை – யாழ். மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன்

மாநகர கண்காணிப்பாளர்களின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டு இருந்தது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் தெரிவித்தார்.

யாழ் மாநகரில் தண்டப்பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கும் சீருடையை வடிவமைத்துப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து மணி நேரம் வரை விசாரணைகள் இடம்பெற்றது.

விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாநகர திண்மக்கழிவகற்றல் தொடர்பாக தண்டப்பணம் அறவிடும் அதிகாரங்கள் மாநகரசபைக்கு உள்ளதா இது போக்குவரத்து பொலிசாருக்கு உரியது தானே என்ற அடிப்படையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

நல்லூரிற்கு அண்மையாக உள்ள வீதியில் கழிவொயில் ஊற்றப்பட்ட தகவலை யார் உங்களுக்கு வழங்கியது? ஊற்றப்பட்ட கழிவொயில் தொடர்பாக மாநகரசபை பணியாளர்களை அங்கு அனுப்ப உத்தரவிட்டது யார்

என்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநகர சபைக்கு இல்லை என்றும் அதனை செய்வதற்கு யார் அனுமதித்தார்கள் போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

யாழ் மாநகர சபை அமர்விலேயே உத்தியோகபூர்வமாக ஒரு முடிவை எடுத்து தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு சீருடையை வழங்குவது என்றும் கொழும்பு மாநகரசபை ஒத்த சீருடையை எமது மாநகரசபை பணியாளர்களுக்கும் வழங்குவது என்றும் தீர்மானித்தோம். இது ஒருவர் எடுத்த முடிவு அல்ல ஒட்டு மொத்தமாக கொழும்பு மாநகர சபை எடுத்த முடிவை தழுவி இந்த முடிவு எட்டப்பட்டது.

கழிவொயில் ஊற்றப்பட்டுள்ளது தொடர்பாகவும் அதில் பொதுமக்கள் வழுக்கி விழுகின்றமை தொடர்பிலும் நல்லூர் பகுதியில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் எனக்கு தெரிவித்த நிலையிலே நாம் ஒரு தற்காலிக ஏற்பாடாக அதனை சீர் செய்ய எமது மாநகர பணியாளர்களை ஈடுபடுத்தினோம்.

மனிதாபிமான அடிப்படையிலேயே நாங்கள் இந்த பணியை செய்தோம். அதேவேளை ஏனைய தரப்புகளின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வேலையை நாம் செய்யவில்லை.

நல்லூர் வீதியில் ஊற்றப்பட்ட கழிவொயில் தொடர்பான விசாரணைகளில், கழிவொயில் ஊற்றப்பட்ட விடயத்தை எனக்கு தெரிவித்த கடை உரிமையாளரும் விசாரணைகளுக்காக தற்போது அழைக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன்.

மேலதிக விசாரணைகளுக்காக தேவைப்பட்டால் கொழும்புக்கு வரவேண்டிய நிலைமை ஏற்படுமென்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். சீருடை விவகாரங்கள் விசாரணைகள் முடிந்துவிட்டது. ஆனால் உங்களுடைய முகப்புத்தகத்தில் போடப்பட்ட பதிவுகள் தொடர்பாக விசாரணைகள் சில வேலைகள் உங்கள் மீது இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நிறைவுக்கு வந்தன என்றார்.

Related Posts