Ad Widget

அணு ஆயுதம் தயாரிக்க உதவும் யுரேனியத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்!

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது.

irac-ureniyam

ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் தமது அமைப்பு கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து “இஸ்லாமிய தேசம்” என்ற தனிநாடும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக பக்தாதி அறிவிக்கப்பட்டும் இருக்கிறார். இவருக்கு கீழ்தான் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இருக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈராக்கின் தூதர் முகமது அலி அல்ஹாகிம் கடந்த 8-ந் தேதியன்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், மொசூல் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றிய போது அங்கு பல்கலைக் கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திருந்த அணு ஆயுதம் தயாரிக்க உதவும் 40 கிலோ யுரேனியத்தை கைப்பற்றிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றிய யுரேனியம் குறைந்த அளவுதான். ஆனாலும் இதை வேறு பொருட்களுடன் கலந்து ஆயுதங்களை தயாரித்து பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த யுரேனியத்தை ஈராக்கை விட்டு வேறு ஒரு நாட்டுக்கு கடத்திச் செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது” என்றும் பான் கி மூனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேன் அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறித்தான் அமெரிக்கா அந்நாட்டுக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து ஈராக்கை அமெரிக்காவின் படைகள் கைப்பற்றி சதாம் உசேனை தூக்கிலிட்டது. ஆனாலும் அணு ஆயுதம் எதுவுமே இல்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் அணு ஆயுத தயாரிப்புக்கான மூலப் பொருளான யுரேனியம் சிக்கிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக்கே புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts