Ad Widget

அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்கின்றன ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா, பைசர் தடுப்பூசிகள்!!

அடுத்த மாதம் ஒக்ஸ்போர்ட் மற்றும் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இந்தியா மூலமாகவும், பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது, கொரோனா தடுப்பூசியை பெற்றுகொள்ள இந்தியாவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.

இதற்கிடையில், கோவக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் 20 சதவீத மக்களை உள்ளடக்கும் வகையில் தடுப்பூசியை வழங்குவதாக உலக சுகாதார அமைப்பு உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்கும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறுபவர்களின் முன்னுரிமை பட்டியலை சுகாதார அமைச்சு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

அதன்படி தொற்றினால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts