Ad Widget

அடுத்த ஆண்டு தமிழருக்கு தீர்வு நிச்சயம்! – சம்பந்தன்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தமது அரசியல் பயணத்தை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளோமென்று கூறுகிறார்கள். எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. எமது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறோம். தொடர்ந்தம் நீட்டிக்கொண்டுபோக நாம் விரும்பவில்லை.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் உயர்ந்த வெற்றியொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு தருவார்களானால் 2016ஆம் ஆண்டுக்குள் எமது மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை கண்டே தீருவோம். அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும். நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதவேண்டும்.

யுத்தம் முடிந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தலும் வட மாகாண சபை தேர்தலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிடவுள்ளோம். அதில் எமது அரசியல் இலக்கு உடனடித் தேவைகள் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் அபிலாஷைகள் தொடர்பில் தெளிவாக கூறுவோம்.

எங்களைப் பொறுத்தவரை நாம் ஒரு திறமான வெற்றியைப் பெறவேண்டும். எமது இலக்கு 20 ஆசனங்களாகும். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புபோட்டியிடாமைக்கு என்ன காரணம்? எங்கள் கவனம் முழுவதும் வடகிழக்கை நோக்கியதாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண இறைமை பெற்று போதிய சுயாட்சி அதிகாரத்தை பெற்று தாமே தம்மை ஆளும் அதிகாரத்தை உண்டாக்கும் வகையில் இந்த தேர்தல் பயன்படுத்தவேண்டும்.

வடக்குகிழக்குக்கு வெளியே நாம் அதிக மக்களைக் கொண்டவர்களாக காட்டினால் வடகிழக்கில் நாம் எடுக்க வேண்டிய உறுதியான நிலை பலவீனம் அடைந்து விடும். அக்காரணத்தின் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாணத்தில் போட்டியிடவில்லை.

போட்டியிட்டிருந்தால் இன்னுமொரு தேசியப்பட்டியலை நாம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். வடக்கு கிழக்கு மக்கள் அடைய வேண்டிய உரிமை பலவீனம் அடைந்து விடக்கூடாது என்பதனாலேயே நாம் போட்டியிடவில்லை.

வடக்குக்கும் கிழக்குக்கும் திருகோணமலை ஒரு பாலமாக அமைய வேண்டும். வடக்கில் எதுவித பாதிப்பும் ஏற்பட முடியாது. இது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். அது போன்றதே மட்டக்களப்பு மாவட்டம். மட்டக்களப்பில் 75 வீதமான மக்கள் தமிழ் மக்கள் என்பதை யாமறிவோம். இந்த இரண்டு தமிழ்ப்பிரதேசத்துக்கு இடையில் பாலமாக அமைவது திருகோணமலை. இப்பாலம் பலமாக இருக்க வேண்டும். இது பலமாக அமைய தெற்கும் வடக்கும் உதவியாக இருக்க வேண்டும். இப்பாலத்தை பலமாக வைத்திருப்பதில் தமிழ் மக்களுடைய பங்களிப்பு அதிகமாகும்.

திருகோணமலை மக்கள் 80 வீதம் வாக்களிப்பார்களாக இருந்தால், நாம் இரண்டு ஆசனங்களை இம்மாவட்டத்தில் பெறமுடியும். தமிழ் மக்களே இதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். திருகோணமலையில் பல தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஈ.பி.டி.பி கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் என்பவற்றைக் குறிப்பிடலாம்.அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கொள்கையும் அவர்களின் செயற்பாடுகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகும், அதில் அமைச்சர் பதவி ஏற்பது, ஒற்றையாட்சி முறையொன்றை ஏற்றுக் கொள்வது என்பன உள்ளன. இதுதான் அவர்களின் கொள்கை செயற்பாடு. அந்த அடிப்படையில் தான் ஜி.ஜி பொன்னம்பலம் செயற்பட்டார்.

செல்வா–பண்டா, செல்வா –டட்லி ஒப்பந்தங்களை எதிர்த்தார். எமது இனத்தை மண்ணை பாதுகாப்பதற்காக இந்த ஒப்பந்தங்கள் தந்தை செல்வாவால் மேற்கொள்ளப்பட்டன. தந்தை செல்வாவின் முக்கியமான நோக்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடையாளங்கள் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதாகும். அதற்காகவே அந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்தது. சமஷ்டி கேட்ட போது ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். இன்று அவருடைய சின்னத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போட்டியிடுகிறார். சைக்கிள் சின்னத்தில் இரண்டு தேசம் ஒரு நாடு என்று கூறும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி இப்பொழுது போட்டியிடுகிறார்கள். தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தான் இப்பொழுது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என்று கூறுகிறார்.

எங்களைப் பொறுத்தவரை நாம் எமது அரசியல் பயணத்தை முடிக்கின்றோம். எனது கணிப்பின்படி 2016ஆம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்த கூடிய நிலைமையை ஏற்பட வேண்டும். ஏற்படுத்துவோமெனக் கூறுகின்றோம் என்றார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி,வேட்பாளர் க.துரைரட்ண சிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

Related Posts