Ad Widget

அடுத்த ஆண்டின் இறுதிக்குள் வட்டு இந்துக்கல்லூரி 10 கோடி ரூபா பெறுமதியான வளங்களைப் பெற்றுக்கொள்ளும் – கல்வி அமைச்சர்

ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் தொடர் கோரிக்கைக்கமைவாக வட்டு இந்துக் கல்லூரிக்கு நாம் அதிக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அதற்கமைவாக அடுத்த ஆண்டின் இறுதிக்குள் வட்டு இந்துக்கல்லூரி 10 கோடி ரூபா பெறுமதியான வளங்களைப் பெற்றுக்கொள்ளும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

vaddu-hindu-panthula-kunavarththana

அக்கல்லூரியில் அமைக்கப் பெற்ற மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் நேற்றயதினம் (14) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இப்பகுதிகளில் பௌதீகவளங்களை நாம் போதுமான அளவு வழங்கி வருகின்றபோதும் ஆளணியினைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களையே எதிர்கொண்டு வருகின்றோம். கடந்தகால யுத்தம் இப்பகுதியில் கல்வியியலாளர்களின் உருவாக்கத்திற்கு பெரும் தடையாக இருந்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் நாம் அதற்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களினதும் ஆலோசனைக்கமைவாக க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த 3000 பேருக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை வழங்கினோம்.

அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு மற்றும் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பத்தாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களை வழங்குவதற்காக நிதி அமைச்சின் அனுமதியைக் கோரியுள்ளோம். எவ்வாறாயினும் அடுத்த வருட இறுதிக்குள் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிடும் என நான் உறுதிபடக் கூறுகின்றேன் எனக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர்,

vaddu-hindu-1

ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பாராளுமன்றத்தில் அடிக்கடி என்னோடு கலந்துரையாடி விட்டு இந்துக் கல்லூரியை எவ்வாறு தரமுயர்த்த வேண்டும் என ஆலோசிப்பார். அதற்கமைவாக ஆயிரம் பாடசாலைத்திட்டத்திற்குள் இப்பாடசாலையையும் நாம் உள்வாங்கினோம். அதுமட்டுமன்றி தொழில்நுட்பக் கல்வியை வழங்கக்கூடிய 251 பாடசாலைகளில் ஒன்றாகவும் இப்பாடசாலையை உள்வாங்கினோம். அதனடிப்படையில் இப்பாடசாலைக்கு எமது அரசாங்கத்தினூடாக இரண்டு கோடி பெறுமதியான மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆறுகோடி பெறுமதியான மகிந்தோதய தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றுடன் மேலும் பல தொழில்நுட்ப வளங்களையும் சேர்த்து அடுத்த ஆண்டின் இறுதிக்குள் 10 கோடிரூபா பெறுமதியான வளங்களைப் பெற்றுக்கொண்ட பாடசாலையாக வட்டுக் இந்துக்கல்லூரி திகழப்போகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையிலே 251 பாடசாலைகளில் மட்டுமே உயர்தர பாடமாக தொழில்நுட்ப பாடம் கற்பிக்கப்படுகின்றது அந்த பாடசாலைகளை நாம் வன்.ஏ.பி சுபர் பாடசாலைகள் என அழைக்கின்றோம் அந்தவகையில் வட்டு இந்துக்கல்லூரியும் இன்று தொடக்கம் வன்.ஏ.பி சுபர் பாடசாலையாக விளங்குகின்றது. கடந்த கால அரசாங்கங்கள் குறிப்பிட்ட சில பாடசாலைகளை மட்டுமே தரமுயர்த்தி செல்வந்தர்களின் பிள்ளைகள் மட்டுமே கற்கக்கூடிய வாய்ப்புக்களை வழங்கிவந்தது பின்தங்கிய பகுதிகளையும் கிராமங்களையும் அவ் அரசாங்கங்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதனால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள் வடக்கிலும் தெற்கிலும் இரத்தக்கறை படிந்த வரலாற்றையே பதிவு செய்திருந்தன. இனியும் அவ்வாறான நிலை உருவாகாமல் தடுப்பதற்காக நாம் இன்று கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts