கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமியறையிலிருந்து, 16 வயது சிறுவனின் சடலத்தை பொலிஸார மீட்டுள்ளனர்.
அதேபகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் என்ற சிறுவனே, கடந்த வௌ்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், க.பொ.சா/த பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சிறுவனது நண்பன், அண்மையில் உயிரிழந்து விட்டதன் பின்னர், இந்தச் சிறுவன் வெகுநாட்களாக மனவிரக்தியில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றில், உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியிலுள்ள வாடகை வீடொன்றிலிருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ரி.வினோத் என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன், மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் வீட்டில், சக நண்பர்களுடன் வாடகைக்கு தங்கியிருந்து, உயர்தரத்தில் கல்வி கற்றுவந்தார் என்று தெரியவந்துள்ளது. சம்பவ தினமான வெள்ளிக்கிழமை இரவு, குறித்த மாணவன் சக நண்பரான மாணவருடன் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவர், காதல் தோல்வி ஏற்பட்டு மனவிரக்தியில் இருந்தார் என்று தெரியந்துள்ளதாகவும் இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.