Ad Widget

அசோகவனத்துச் சீதை புத்திசாலியாக இருந்தாள்

இராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அவளைச் சுற்றி அசுரர் கூட்டம். கூடவே வேல், அம்பு, ஈட்டி என்ற ஆயுதங்களையும் அவர்கள் தரித்திருத்தனர். திரிசடை என்பாளைத் தவிர மற்றெல்லோரும் சீதையைப் பயமுறுத்துபவர்களே. நிலைமை இதுவாக இருக்கையில், இராம பிரானின் பக்தன் அனுமன் இலங்கைக்கு வந்து அசோகவனத்தை அடைகின்றான். அங்கு சீதையைச் சந்தித்து இராமனின் தூதனாகத் தான் வந்திருப்பதை தெரிவிக்கின்றான்.

மாயமானால் ஏமாந்த சீதை அசோகவனத்தில் தெளிந்த சிந்தனை உடையவளாக இரு கின்றாள்.தான் எடுக்கின்ற முடிபால் இன்னொரு அபத்தம் ஏற்பட்டுவிடலாகாது என்பதில் அவள் நிதானமாக இருந்தாள். அவள் நினைத்திருந்தால் வந்த அனுமனோடு அவள் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அதைச் செய்வதால் அனுமனுக்கு ஆபத்து ஏற்படலாம். இராம, இலக்குமணருக்கு அது களங்கமாகலாம். தொடர்ந்தும் இலங்கை வேந்தனின் ஆக்கிரமிப்பும் சீண்டலும் இருக்கலாம். ஆகையால் அனுமனோடு தப்பித்துச் செல்வதை அவள் விரும்பவில்லை.

இராம சேனை இலங்கைக்கு வந்து இராவண சேனையை அழித்து இராமன் விரும்புகின்றவனிடம் இலங்கையின் ஆட்சியை ஒப்படைத்த பின்பு தனக்கு விடுதலை கிடைப்பதே உண்மையான – நிம்மதியான விடுதலை என்று சீதை நினைத்தாள். அந்த நினைப்பில் நிறையவே அர்த்தமுண்டு. ஆம். அசோகவனத்து சீதையின் நிலைமைதான் ஈழத் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை. சீதைக்கு திரிசடையாவது துணை நின்றாள். நமக்கு ஐ.நாவும் துணை இல்லை.

எனவே மிகவும் நிதானமாக – புத்திசாலித் தனமாக -அரசியல் இராஜதந்திர வியூகத்தோடு எங்களுக்கான எதிர்காலத்தை நோக்கி நாங்கள் நகர வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எங்களின் சமகால நிலைமையை தெளிவாகப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதொன்று. இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்தான் தமிழ் மக்களின் ஒரு பலமான சக்தி. எனவே அந்த சக்தியை வலுவிழக்கச் செய்வதில் அசோகவனத்துக் காவலர்கள் விழிப்பாக இருப்பாVர்கள். ஆகவே, நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் இழப்பில் இலாபம் தேடுவதில் எங்களிடமும் பலர் உள்ளனர். அதோ! வீட்டின் கதவோரமாக நின்று கண்ணீர் விடுகின்ற உங்கள் தாயை – உங்களால் தன் குடும்பப் பாரம் குறையும் என்று கனவு காணும் உங்கள் தந்தையை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

-வலம்புரி ஆசரியர் தலையங்கம் 29.11.2012 –
http://www.valampurii.com/viewnews.php?ID=35702

Related Posts