Ad Widget

“அதிபர் பிரச்சினை தடம்மாறிச் செல்கிறது” : ஆயூப் அஸ்மீன்

“தென்னிந்திய திருச்சபைக்கு எதிரான வேறு சில கிறிஸ்தவ அமைப்புகள், சுமந்திரனின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் அரசியல்வாதிகள், உடுவில் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள், கல்லூரிக்கு எதிரானவர்கள், தமிழ் மக்களிடையே குழப்பங்கள் இருக்கின்றன என்று வெளிக்காட்ட நினைக்கும் பெரும்பான்மைமொழி ஊடகங்கள், தமிழர் அரசியலில் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரே, உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினைக்கு காரணம்” என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஆயூப் அஸ்மீன், தனது முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார்.

உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸை, பாடசாலையின் ஆளுநர் சபை நீக்கியமையால், கல்லூரியில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் அஸ்மின் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“இந்தப் போராட்டம், உண்மை ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னமே பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும் என்பதை எனக்கு மிக யதார்த்தமாக உணர்த்திக் கொண்டிருக்கின்றது. பொய்யான பலரது முகத்திரைகள் நிச்சயம் கிழியும். அதற்குள் ஒழிந்திருக்கும் மோசடிக்காரர்களை மக்களும், குறிப்பாக உடுவில் மகளிர் கல்லூரியின் பாடசாலை சமூகமும் கண்டுகொள்ளும். பொது நோக்கு என்ற போர்வையுடனான சுயநல உள்நோக்குகள் வெளிப்படும்.

தென்னிந்திய திருச்சபையின் முழுமையான நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு தனியார் பாடசாலையின் விவகாரங்களை சந்திக்குக் கொண்டு வந்தவர்கள், அதன் பின்னால் சுமந்திரன் என்கின்ற முற்போக்குத் தமிழர்களின் தளபதியை வம்புக்கு இழுத்தவர்கள்.

இளம் மாணவிகளை வீதிக்குக் கொண்டு வந்து, பாடசாலைக்கு முன்னால் போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஜனாதிபதியின் முன்னால் கூட்டி வந்து மகஜர் கொடுக்கின்றோம் என்ற போர்வையில் இளம் மாணவிகளை ஜனாதிபதியின் காலில் விழவைத்தவர்கள், அழுங்கோ அழுது கேளுங்கோ என்று உசுப்பேத்தியவர்கள், முதலமைச்சர் வீடு தேடிச் சென்று போலியான பிரச்சினைகளை எடுத்துச் சொன்னவர்கள் எல்லோருமே உடுவில் பாடசாலையில் இருந்து ஓய்வு பெறும் அதிபரையும், அந்த அதிபரின் மீது அன்புகொண்ட இளம் மாணவிகளையும் பலிகொடுத்து, தம்முடைய அற்பத்தனமான இலக்குகளை அடைந்துகொள்ள அயராது முயற்சிக்கின்றார்கள். மக்களை தவறாக வழிநடத்துகின்றார்கள்.

அதிபர் பிரச்சினை, மாணவிகளைத் தாக்கியமை என்றும், பொலிஸார் புகைப்படம் எடுத்தார்கள் என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்புத் தேவை என்றும் மாணவிகள் அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்றும் தடம் மாறிச் சென்றுகொண்டிருக்கின்றது. உணர்ச்சிக்கோசம் எழுப்பியவர்கள், வசை பாடியவர்கள் எல்லோரும் தமது தவறுகளை இப்போது உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். இப்படித்தான் கொள்கைவாதிகள் அடிக்கடி சோதிக்கபடுவார்கள், அப்போதெல்லாம் பொறுமையும் நிதானமும் அவர்களை மேலும் மேலும் உயர்த்திவிடும். இங்கும் அதுவே நடந்து கொண்டிருக்கின்றது” என அவர், தனது முகப்புத்தகப் பதிவில், மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts