Ad Widget

அசிட் வீச்சில் மாணவி கொலை; சாட்சிகளிடம் விசாரணை

இளவாலைப் பகுதியில் மாணவி ஒருவர் மீது அசிட் வீசி அவரை கொலை செய்த வழக்கில் மாணவியின் தாயின் சாட்சியத்தை தொடர்ந்து மேலதிக சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளவதற்காக குறித்த வழக்கை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மேற் குறித்த வழக்கு விசாரணைகள் 6 வருடங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இளவாலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவியின் மீது இனம் தெரியாதவர்கள் அசிட் வீசிச்சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 55 நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் காதல் விவகாரத்தால் இடம்பெற்றது என சந்தேகித்த பொலிஸார் குறித்த மாணவியை காதலித்த இளைஞன் ஒருவரை கைதுசெய்து மன்றில் ஆஜர்ப்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.
குறித்த வழக்கின் முக்கிய சாட்சியாக இனங்காணப்பட்ட குறித்த மாணவியின் தாயார் சாட்சியமளிக்கையில்,

சம்பவம் இடம்பெற்ற அன்று இரவு 9.30 மணியளவில் நான் வீட்டில் சமையலறையில் இருந்தேன். எனது மகள் வீட்டின் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார், அத் தருணம் திடீரென மகள் அலறியதுடன் தன க்கு ஏதோ ஒன்று ஊற்றப்பட்டதாகவும் உடல் எல்லாம் எரிவதாகவும் கூறினார்.

நாம் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தோம். அப்போதுதான் மகள் மீது அசிட் ஊற்றப்பட்டது தெரியவந்தது.

எனினும் யார் மகள் மீது அசிட் ஊற்றினார்கள் என நான் காணவில்லை. மகளும் அதை அறிந்திருக்கவில்லை. எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எனது மகளைக் காதலித்து வந்ததும் தொலைபேசியில் குறுந்தகவல் மூலம் மிரட்டல் விட்டதையும் அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் மேலதிக சாட்சிகளின் விசாரணைக்காக வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Posts