Ad Widget

அங்கஜனுக்கு எதிராக சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி அவர்களை, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

angajan ramanathan

சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் நகர சபை தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் வியாழக்கிழமை (22) நடைபெற்றபோது, ஆளுங்கட்சி உறுப்பினர் த.சுதர்சன் இந்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்தார்.

தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றுகையில், ‘பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது.

இதேபோன்று எதிர்காலத்தில் நடப்பதற்கு அனுமதியளிக்கக்கூடாது என இங்கு எடுக்கும் தீர்மானத்தின் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தென்மராட்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பவுள்ளதாகவும் கூறினார். இந்த தீர்மானத்தை தவிசாளர் வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமுர்த்தி பயனாளிகள் மிரட்டப்பட்மையை கண்டித்தும் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்களால் மிரட்டப்பட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரச்சாரத்துக்கு அழைத்து செல்லப்பட்டமை மற்றும் வாக்குகள் இடுவதற்கு வற்புறுத்தப்பட்டமையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினர் அ.பாலமயூரன் தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றுகையில், ‘அரச அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என தேர்தல் விதிமுறைகளையும் மீறி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் வரவேண்டும் அல்லது சமூர்த்தி முத்திரை நிறுத்தப்படும் என உத்தியோகத்தர்கள் மக்களை மிரட்டியுள்ளனர்.

சமுர்த்தி பயனாளிகள் முறையான விதத்தில் தெரிவு செய்யப்படவில்லை. கட்சி சார்ந்தவர் ஊழல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு இல்லாமல் நீதியான முறையில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சமுர்த்தி பயன்களைப் பெறவேண்டும்.

இதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும். இந்த தீர்மானத்தின் பிரதிகள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தென்மராட்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பவுள்ளதாகவும் கூறினார்.

சாவகச்சேரி நகர சபையில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு இடமில்லை

நகர அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் 60 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் சாவகச்சேரி பொதுச்சந்தையில் வெளிமாவட்ட அங்காடி வியாபாரிகளுக்கு இடம்கொடுக்கக்கூடாது என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஞா.கிஷோர் கொண்டு வந்து உரையாற்றுகையில், ‘வெளிமாவட்ட அங்காடி வியாபாரிகளை அனுமதித்தால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பண்டிகைக்காலங்களில் விசேட ஏற்பாடுகள் மூலம் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கலாம்’ என்றார். இந்த தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Related Posts