Ad Widget

அகதி வாழ்க்கையில் எப்போதும் எங்களுடன் இருப்பது கல்வியே

எமது மக்களின் கல்வியே கால் நூற்றாண்டு அகதி வாழ்வுக்கு பின்பும் உரிமையுடன் கூடிய வாழ்வுக்காக எமது மக்களிடம் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

p-kajatheepan

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள சிறார்களுக்கு வடமாகாண சபையின் கல்வி அமைச்சினால் பாடசாலை உபகரணங்கள் மற்றும் சப்பாத்துகள் வழங்கும் நிகழ்வு மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

வலிகாமம் வடக்கில் தமது வளமான நிலத்தில் விவசாயத்தையும், கடலில் சுதந்திரமான மீன்பிடியையும் மேற்கொண்டு தமது சொந்தக்காலில் வாழ்ந்த மக்கள், தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு கால் நூற்றாண்டு காலமாக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

தாம் கற்ற கல்வியின் மூலம் பெற்ற ஆத்ம பலத்தின் மூலம் இன்றும் தமக்காக குரல் கொடுத்துப் போராடிவரும் எமது மக்களின் அடுத்த தலைமுறை வறுமை நிலையால் கல்வியைக் கைவிடாது, கற்று உயர்நிலையடைய வேண்டும். இதன் மூலமே எமது இனத்தின் விடுதலையை விரைவுபடுத்த முடியும்.

தமிழினம் கடந்த காலப்போரினாலும், தற்போதைய சூழ்நிலைகளினாலும் எதை எதையோ இழந்த போதும் இன்றும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு எமது இனம் கல்வியை இழக்காதமையே காரணமாகும்.

அப்படிப்பட்ட எமது இனத்தின் சொத்தான கல்வியை, எமது இனத்தின் அடுத்த தலைமுறைகள் எப்பாடுபட்டேனும் கற்று உயர்நிலையை அடையவேண்டும். எம்மக்களின் வளமான இடங்களை ஆக்கிரமித்து, அவர்களை அகதி வாழ்க்கைக்குத் தள்ளிவிட்டு எமது மக்களின் இடங்களில் தமது ஹோட்டல்கள், நீச்சல் தடாகங்கள், விளையாட்டு மைதானங்களை அமைத்து களியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கால் நூற்றாண்டு காலமாக எமது மக்கள் முகாம் மக்களாக அல்லல்பட்டு வருகின்றனர். எமது மக்கள் சொந்த நிலத்துக்கு செல்வதற்கு எவ்வித தியாகங்களுக்கும் தயாராகவே இருக்கின்றனர். சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி, பல போராட்டங்களுக்கு எம்மக்கள் இன்றும் அணிதிரண்டு குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கான ஆத்ம பலத்தை எம்மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியே வழங்கி வருகின்றது. இவ்வாறான கல்வியை அடுத்த தலைமுறைக்கும் புகட்டி அவர்களையும் ஆத்ம பலமுள்ளவர்களாக மாற்றும் கடமை எங்கள் யாவருக்கும் உள்ளது என்றார்.

Related Posts